நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்படப் போட்டி ஒன்றை மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.
இந்த குறும்படப் போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரொடக்சன்ஸ். அவ்விதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த 53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த விருது வழங்கும் விழா வரும் நவ-19ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.
முதல் பரிசாக 10 லட்சம், 2-ம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3-ம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசுத் தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கின்றன.