குற்றம் கடிதல் பட இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.
சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஆவணப்பட இயக்குநரான பெண், தன்னுடைய மாமியாரின் கல்லூரி வாழ்க்கை பற்றியும், அவரது தோழிகள் பற்றியும் தெரிந்து கொள்கிறார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்து விட்ட அவர்களை மீண்டும் சந்திக்க வைத்து, வீட்டுச் சிறையில் இருந்து மீட்டு ஜாலி டூர் போகிறார்கள்.
பெண்களின் வாழ்க்கை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாகவும் எமோஷனலாகவும் பிரம்மா ஒரு அருமையான படைப்பை கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய, பெண் சுதந்திரம் பேசும் கதையை கமர்சியல் அம்சங்கள் சேர்த்து, கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்து, அழகான திரைப்படமாகப் படைத்திருக்கிறார் பிரம்மா.
மீண்டும் களமிறங்கியிருக்கும் ஜோதிகா, நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் 36 வயதினிலே படத்தையடுத்து, இப்படத்தில் முற்போக்கு சிந்தனை கொண்ட ஆவணப்பட இயக்குநராக வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
ஜோதிகாவை முன்னிறுத்தி வெளிவந்த படம் என்றாலும், ஆடியன்ஸ்களின் அப்லாஸ்களை அதிகம் வெல்வது ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என்ற மூத்த நடிகைகள் தான். அதிலும் ஊர்வசி ஒவ்வொரு காட்சியிலும் பின்னிப் பெடலெடுக்கிறார்.
இவர்கள் மூவரும் தங்களின் முதல் காதலைப் பற்றி கூறுவதை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் சரண்யா, பானுப்பிரியா குடித்துவிட்டு தங்கள் கவலைகளை சொல்லி கணவர்களை திட்டும் இடம் சிரிக்கவும் வைத்து ஆண் வர்க்கத்தை சிந்திக்கவும் வைக்கின்றது.
முதலில் அம்மாவை மதிக்காத முரட்டு இளைஞனாக வந்து, பிறகு கிளைமேக்ஸில் கண்கலங்கும் ஊர்வசியின் மகனாக வரும் ‘மெட்ராஸ்’ புகழ் பாவேலுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
ஜிப்ரானின் இசையில் அமைந்துள்ள பின்னணியும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். பிரேமின் ஒளிப்பதிவு, காட்சிகள் இடம்பெறும் இடங்களில் நாமே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.
சினிமாவின் பார்வையில் ‘மகளிர் மட்டும்’ – எல்லோரும் கொண்டாடலாம்.