நான்கு வருடங்களுக்கு முன்பு, காந்தி ஜெயந்தி (அக். 2) அன்று கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார் மூஞ்சி குமார்’ ஆக பட்டிதொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.
இப்போது மீண்டும் அதே தேதியில் தங்களது அடுத்த படமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்திய காமெடி கதகளி ஆட்டம் இப்போது வரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்துபேசப்பட்டு வருகிறது.
இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30 நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு இன்று பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக அறிமுகமான சாயிஷா சாய்கல் ‘ஜுங்கா’ படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜாலி பாடல்களையும், மெலடி மெட்டுக்களையும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்காக உருவாக்கித் தந்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது ‘ஜுங்கா’ திரைப்படம். இப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்து விட்டது. படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ள அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின் உரிமையை மிகப்பெரிய விலைகொடுத்து வாங்கியுள்ளது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கிறார்கள். இவர்களின் கூட்டணியோடு விஜய்சேதுபதியின் ‘கல கல’ காமெடி எபிசோடுகளைப் பார்க்க இப்போது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பிலிருக்கின்றனர்.