full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

தமிழகத்தின் 29வது ஆளுநராக பன்வாரிலால் பதவியேற்பு

தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதைத்தொடர்ந்து அசாம் மாநில ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, அன்பழகன், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இல. கணேசன் எம்.பி., தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புதிதாக பதவியேற்ற ஆளுநருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்தும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். ஆளுநருடன் அவரது மனைவியும் விழாவில் பங்கேற்றார்.

தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள பன்வாரிலால் புரோகித் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர். அவருக்கு 77 வயது ஆகிறது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். தற்போது ‘தி ஹிதாவதா’ என்ற நாளிதழின் உரிமையாளர்-நிர்வாக ஆசிரியராகவும், நாக்பூரில் பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழக ஆளுநராக லெப்டினெட் ஜெனரல் சர் ஆர்சிப்பால் எட்வர்ட் நை இருந்தார். அதன் பின்னர் ஆளுநர், பொறுப்பு ஆளுநர் என்று 28 பேர் தமிழக ஆளுநர்களாக இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் 29-வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.