full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

இம்சை அரசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையை முழுவதுமாய் ஆக்கிரமித்து வைத்திருந்த சமயம். 1991-வது ஆண்டின் முற்பகுதியில் ஒல்லியான தேகத்துடனும் வசீகரமான முக அமைப்பென்று எதுவும் இல்லாமலும் “போடா போடா புண்ணாக்கு” என்று ராஜ்கிரண் நடித்த “என் ராசாவின் மனசிலே” படத்தில் ஆடிய போது யாரேனும் அந்த பையன்தான் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவையை ஆளப் போகிற தமிழனென்று நினைத்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஆனால் நடந்தது அதுதான். தான் நடிக்கத் தொடங்கிய அந்த இடத்திலிருந்து இன்று வரையிலாக கிட்டத்தட்ட 26 ஆண்டுகளில் தனது நகைச்சுவை நடிப்பினால் பலரின் மனக்கவலைகளை மறக்கடிக்கக் கூடிய ஒரு மகாகலைஞனாக முற்றிலுமாக வேறொரு பரிமாணத்தில் நிற்கிறார் அன்று ”போடா போடா புண்ணாக்கு” பாடிய அந்தப் பையன்.

அவர் வேறு யாருமல்ல, அன்று முதல் இன்று வரை மண்மணம் மாறாத “வைகைப்புயல்” வடிவேலு தான்!

கவுண்டமணி – செந்திலோடு இணைந்து நடித்த காலகட்டமாகட்டும், போட்டி நடிகராக இருந்த விவேக்கோடு இணைந்து நடித்த போதாகட்டும் தன் தனித்த முத்திரையை எந்த இடத்திலுமே விட்டுத் தராதவராக இருந்தது முதல் பின்னாளில் “வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்குங்கள் முதலில்” என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கேட்குமளவிற்கு வந்தது வரை அவருடைய வளர்ச்சி என்பது எழுதுவதற்கு மட்டுமானால் எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அந்த பயணத்தின் தூரம் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது.
மற்றவரைக் கிண்டல் செய்வதை மட்டுமே நகைச்சுவையெனக் கருதிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனது அபாரமான உடல்மொழியாலும், வெகுளித்தனம் கொஞ்சுகிற வாய்மொழியாலும் நகைச்சுவையின் வண்ணத்தை முற்றிலுமாக மாற்றித் தந்தவர் வடிவேலு!

தலைப்புப் பஞ்சத்தில் சிக்கித் தள்ளாடும் தமிழ் சினிமாவில் வடிவேலுவின் பல வசனங்களே இன்று தலைப்புகளாக மாற்றப்படுவதில் இருந்தே அவரின் வீச்சை நாம் புரிந்துகொள்ள முடியும்.

வடிவேலு இருந்தாலே படம் வெற்றி தான் என்று சக கலைஞர்களையும், வடிவேலுக்காகவே படம் பார்க்கலாம் என்று ரசிகர்களையும் ஒரே நேரத்தில் நினைக்க வைத்தவர் அவர். கதை வாயிலாக வெற்றி பெறாத பல படங்களைக் கூட தன் நகைச்சுவையின் மூலமாக காப்பாற்றியவர் வடிவேலு.

கதைப்பஞ்சம், தலைப்புப் பஞ்சம் போல நகைச்சுவைப் பஞ்சத்தாலும் தத்தளித்துக் கொண்டிருக்கிற தற்போதைய தமிழ் சினிமாவில், வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பை மிஞ்ச வடிவேலுதான் மீண்டும் பழைய வடிவேலுவாக வரவேண்டும்!

கைப்பிள்ளையாக, வீரபாகுவாக வந்து வயிறுவலிக்க சிரிக்க வைக்கவும் தெரிந்தவர். எசக்கியாக, ஒச்சுவாக வந்து கலங்க வைக்கவும் தெரிந்தவர்!

இதோ இந்த நொடியில் வெள்ளித்திரை வழியாகவோ, சின்னத்திரை வழியாகவோ, கைப்பேசியின் தொடுதிரை வழியாகவோ யாரையாவது சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிற, யாருடைய கவலையையாவது மறக்கடித்துக் கொண்டிருக்கிற யுகக் கலைஞனுக்கு இதயப் பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது “சினிமாப் பார்வை”!!!!