full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

மெர்சல் – விமர்சனம்!

தடைகளைத் தகர்த்தெறிந்து விட்டு வந்து, அள்ளு சில்லு சிதறவிட்டிருக்கிறது இந்த மெர்சல்!!

அட்லி,  சினிமா என்னும் கலையை தனக்கான அரசியலைப் பேசுவதற்கோ அல்லது தனது சித்தாந்த கருத்துக்களை மக்களிடத்திடத்தில் சேர்ப்பதற்கோ படமெடுப்பதில்லை என்று திடமாக நம்பலாம்..

ஆனால், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப எந்தமாதிரியான  அரசியலைப் பேசினால் ரசிகன் குதூகலமாவான் கைதட்டுவான் என்பதை மிகச் சரியாகப் புரிந்து வைத்துக்கொண்டும்… கதைக்குள் அந்த அரசியலை கமெர்சியலாகக் கையாண்டும் வசூல் செய்யத் தெரிந்த ட்ரேட்மார்க் கமெர்சியல் ஃபிலிம் மேக்கர்…

அட்லி எந்தெந்த இடத்தில் ரசிகன் ஆர்ப்பரிப்பான் என்று நினைத்து சீன் வைத்திருக்கிறாரோ , அந்த இடத்தில் ரசிகன் ஆர்ப்பரிக்கிறான்.. எந்தெந்த இடத்தில் ரசிகன் கலங்க வேண்டும் என்று சீன் வைத்திருக்கிறாரோ அங்கெல்லாம் ரசிகன் கலங்குகிறான்.. ரசிகனின் நாடிபிடிக்கத் தெரிந்த மிகச்சொற்பமான இயக்குநர்களின் வரிசையில் அட்லி எப்போதோ அமர்ந்துவிட்டாலும், கொஞ்சம் ஸ்ட்ராங்காக உட்கார்ந்திருக்கிறார் மெர்சலில்!!  மெர்சலுக்குப் பிறகான அட்லியின் ரேஞ்ச் நிச்சயமாக வேறதான்!

விஜய், பைரவாவிற்குப் பிறகு செம்ம கம்பேக்.. பாட்டு, ஃபைட்டு, ரொமான்ஸ், காமெடின்னு தானொரு அல்டிமேட் கமெர்ஷியல் மெட்டீரியல் என்பதை கெத்தாக நிரூபித்திருக்கிறார்.. படத்தின் அசுர பலமாய் நின்று தன்னை தளபதியாக நிலை நிறுத்தியிருக்கிறார் விஜய்! மனுஷன் எப்டிதான் இந்த உடம்பை மெயிண்டெயின் பன்றாப்ளையோ?? மெர்சல் ஃபிட்!!

நடிகைகளில் நித்யா மேனன் மட்டுமே நடித்திருக்கிறார்.. மற்றபடி சமந்தா, காஜல் அகர்வாலை எல்லாம் ஒரு பாட்டுக்கும், இரண்டு திருப்பத்திற்கு மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள்..

எஸ்.ஜே.சூர்யா, எக்ஸ்பிரஷன் கிங்… திடீர் திடீர் ரீயாக்‌ஷனெல்லாம் சும்மா ஜஸ்ட் லைக் தட் தட்டித் தூக்குறாப்ள.. சிம்ப்ளி சூப்பர்!!

சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு ஆகியோரும் படத்தில் தேவைக்கேற்ப நடித்து இருக்கிறார்கள்.. சத்யராஜ் போல “ரொம்ப நல்ல போலீஸ்” எல்லாம் டைனோசர் காலத்திலேயேப் போய்ட்டாங்கன்னு அட்லிக்கு யாராச்சும் சொல்லி இருக்கலாம்.. படத்தில் சத்யராஜின் பாத்திரம் மட்டுமே அபத்தமாகப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நீண்ட நாட்களுக்குப் பிறகு குதூகலம் தந்திருக்கிறது.. “ஆளப் போறான் தமிழன்” பாடலை விட, “மெர்சல் அரசன்” பாடலில் விவேக்கின் வரிகள் சிறப்பாய் இருக்கிறது!

 அப்பாவின் மரணத்திற்கு பழிவாங்கும் மகன்கள் என்ற சிம்பிள் டெம்பிளேட்டிற்குள் இந்திய மருத்துவத்துறையின் அவலங்களை துகிலுரிக்கும் சிக்கலான கதையை, சிறப்பான திரைக்கதையின் மூலமும்.. ஒளிப்பதிவு, எடிட்டிங் உட்பட சிறப்பான டெக்னிக்கல் ஒர்க்கின் மூலமாகவும் மிகச்சரியாக கன்வே செய்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த “மெர்சல்” !!

டிமானிடைசேஷன், மருந்துப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு, ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்தது, வெண்டிலேட்டர் பவர் இல்லாமல் நால்வர் இறந்தது, இங்குபெட்டரில் இருந்த குழந்தையை எலி கடித்தது, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு பத்து கிலோ மீட்டர் நடந்த கணவன், தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகள் + ஃபோர்ஜரி, அரசாங்க மருத்துவமனைகளின் தரமின்மை என்றெல்லாம் கிழித்தது மட்டுமல்லாமல்.. ரமணா படம் போல புள்ளி விவரமெல்லாம் பேசினா எப்படிங்ணா உங்க படத்தை ரிலீஸ் பண்ண விடுவாங்க?? ஆனாலும் நல்லதைச் சொல்லியே ஆகணும்ங்கிற அந்த துணிச்சலுக்கு ஃபுல் மார்க்குங்ணா!!

கொஞ்சம் படத்தின் நீளத்தைக் கம்மி பண்ணிருக்கலோமோன்னு தோணிச்சு, அப்டியே அந்த ராட்டிணத்தை ஒற்றை ஆளாய் சாய்ப்பதும் லேசாக உறுத்தியது.. மத்தபடி பெருசா குத்தம் சொல்வதெற்கெல்லாம் ஒன்றும் இல்லை..

“ஆளப்போறான் தமிழன்” பாட்டைக் கேட்டுப் பதறிக் கிடந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு “நாங்க கொடூரமானவங்கதான், ஆனா குழந்தைகளுக்குக் கிடையாது” என்கிற ரீதியில் பாட்டோடு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனது புத்திசாலித்தனமாகவேப் படுகிறது.

ஜல்லிக்கட்டு, இலுமினாட்டி அது இதென்று ஹைப் ஏற்றி அது எதுவுமே இல்லாமல் சென்சிபிளாக ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்குள் வலுவான மெசேஜை சொன்னதற்கு வாழ்த்துகள் “மெர்சல்” டீம்!!

தேனாண்டாள் ஃப்லிம்ஸின் நூறாவது படம், செய்த செலவிற்கான நியாயத்தை அவர்கள் அடைவார்கள் நிச்சயமாய்..

மெர்சல் – அட்லி மற்றும் விஜயின் வேற லெவல் கான்ஃபிடன்ஸுக்கு பக்கா ரிசல்ட்!!!