மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த வேளையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
நடிகர்கள் கமல ஹாசன், அரவிந்த் சுவாமி, ஜிவி பிரகாஷ்குமார், ஆர்ஜே பாலாஜி, சரத்குமார், நடிகைகள் ஸ்ரீ ப்ரியா, குஷ்பூ, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர்.
அரசியல் தரப்பிலிருந்து காங்கிரசின் துணை தலைவர் ராகுல் காந்தி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர் சீமான் என முக்கியமான பலரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இவ்வளவு பிரபலங்கள் மெர்சலுக்கு ஆதரவாக குரல் தந்திருந்தாலும்,
நடிகர் சங்கத்திலிருந்தும் சரி, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் சரி இதுவரையில் அதிகாரப் பூர்வமாக ”மெர்சல்” பிரச்சனை குறித்து எந்த விதமான அறிக்கையோ, செய்தியோ வெளிவரவே இல்லை.
அதிலும் குறிப்பாக இரண்டு சங்கங்களிலும் முக்கியமான பொறுப்புகளில் இருக்கக் கூடிய நடிகர் விஷால் இந்த பிரச்சனையில் மௌனம் காப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சங்கக் கட்டிட அடிக்கல்நாட்டும் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததே விஷாலின் இந்த மௌனத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.