ரஜினி போருக்குத் தயாராகிறாரோ இல்லையோ, கமல் போரை ட்விட்டரில் எப்போதோ தொடங்கிவிட்டார். நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக செந்தமிழில் ட்வீட் தட்டி ஆள்பவர்களுக்கு கடுப்பேற்றினார். ஆளும் தரப்பும் அவரை காட்டுக்கு வா, காட்டுக்கு வா என்பது போல் “ முடிந்தால் களத்திற்கு வந்து அரசியல் செய்து பார்” என்று வம்பிழுக்க.. ஒரு வழியாய் கமல் களத்திற்கு வந்தே விட்டார்.
நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பு, என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்துவிட்டு.. நேற்று தான் எண்ணூர் கழிமுகத்தைப் பற்றி ஒரு அறிக்கை தந்திருந்தார். கொசஸ்தலை ஆற்றைக் காப்போம், வடசென்னைக்கு ஆபத்து என்றெல்லாம் பேசியது தீவிர அரசியலுக்கு அவர் வரப்போகிறார் என்பதையே காட்டியது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்ட கமல், அங்கு கொட்டப்படுகிற கழிவுகள் மற்றும் சாம்பல்குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
அதோடு மட்டுமில்லாமல், கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றையும் கமல் அளித்திருக்கிறார்.
இந்த திடீர் நடவடிக்கையால், கமலின் அரசியல் வருகைக்காக காத்திருக்கும் அவரரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே, வடசென்னையை காப்பாற்றுவோம் என்று பேசியிருந்த நிலையில் கமல் இப்போது களத்திலும் இறங்கியிருக்கிறார். இதற்கு வடசென்னை மக்கள் ஆதரவு தருவார்களா? இல்லையா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.