பிசாசு படத்திற்குப் பிறகு கொஞ்சம் நெகிழ்வைத் தந்த ஒரு பேய்ப்படம். பெண்குழந்தைகளின் மகத்துவத்தை மையக்கருத்தாகக் கொண்டதிலேயே வழக்கமான பேய்ப்படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள் “அவள்”.
ஒரு பேய்ப்படத்திற்கு ஹீரோ, ஹீரோயினை விட முக்கியமானவை ஒளிப்பதிவு, பின்னணி இசை, பிற தொழிற்நுட்பங்களும் தான். அந்த வகையில் இந்த மூன்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கிற கேமரா கோணங்களாகட்டும், பின்னணி இசை கச்சிதமாக ஒலிக்க விடப்பட்டுள்ள இடங்களாகட்டும் படத்தை வேறுதளத்திற்கு இட்டுச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவும், இசையமைப்பாளர் கிரிஸ்சும் பெரும்பங்கற்றியிருக்கிறார்கள். எடிட்டர் லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங்கும் நிச்சயம் பேசப்படும்.
மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கிறார். மூட நம்பிக்கையினால் நிகழ்த்தப்படுகிற பெண்சிசுக் கொலையை மையமாக வைத்து கதை செய்து “ஒரு பெண்ணைக் கொன்றுதான் ஒரு ஆண் பிறக்க வேண்டுமெனில், அந்த ஆண் தேவையே இல்லை” என்ற கருத்தைச் சொன்னதற்காக பாராட்டுகள்.
சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ், அனிதா விக்டர் ஆகியோரின் நடிப்பு நம்மை படத்தோடு இறுக்கமாக ஒன்ற வைக்கிறது. அதிலும் அதுல் குல்கர்னியின் மகளாக நடித்திருக்கிற அனிதா விக்டர் பிரமாதமாக நடித்திருக்கிறார். சித்தார்த்துடன் குறும்பு செய்வதாகட்டும், பேய்ப்பிடித்து மிரட்டுவதாகட்டும் சூப்பர் சூப்பர் அனிதா!
நிறைய ஆங்கிலப் பேய்ப்படங்கள் இந்த வகையில் வந்திருந்தாலும், தமிழில் இந்த தரத்தில் ஒரு அரிதான படமாக “அவளை” எடுத்துக் கொள்ளலாம். முதல் பாதியில் வரக்கூடிய 3 காட்சிகள் கல்லுளிமங்கர்களையும் ஒருகணம் நிச்சயமாய் அசைத்துப் பார்க்கும். அடுத்தடுத்து சஸ்பென்ஸ்களுடன் தடதடவென இடைவேளை வரை நகர்ந்த படம், இரண்டாம் பாதியில் கொஞ்சமாய் தொய்வடைந்ததைத் தவிர்த்திருக்கலாம்.
ஆங்கிலப் படத்திற்கு நிகராக என்று ஏன் சொன்னார்கள் என்று படம் பார்க்கும் போது கண்டிப்பாக உணர்வீர்கள். படத்தில் அவ்வளவு “லிப்லாக்” காட்சிகள் வைத்திருக்கிறார்கள். என்ஜாய்!!
மாந்த்ரீகம் என்கிற மூட நம்பிக்கையால் பெண்சிசுக் கொலை செய்யப்படுவது கூடாதென்று சொல்லியவர்களுக்கு, பேய் என்பதே மூட நம்பிக்கைதான் என்பதும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், பேய்ப்படம் என்பதால் சில கேள்விகளைத் தவிர்த்துவிட்டு நிறைய பயந்து, கொஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்து வரலாம் கண்டிப்பாக!