அவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும்.
அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு.
உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான வெறியனாக இருந்தால் என்ன? அவன் சொல்வதில் உண்மை இருக்கிறதா? அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உனக்கு சகிப்புத்தன்மையும் சமூக அக்கறையும் இருக்கிறதா என்பதே முக்கியம். உன்னிடம் இல்லாத சகிப்புத்தன்மைக்கு, உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு… உண்மையைச் சொல்பவன் மீது பழிபோடுதல்… மிகப்பெரிய கேவலம்.
விழித்திரு, படத்தில் மிக இயல்பாகவும், யதார்த்தமாகவும் உண்மையை கதைப்படுத்தி இருக்கும் மீரா கதிரவன், சமூக அக்கறை கொண்ட கலைஞன். அந்த கலைஞனை நான் மதிக்கிறேன்.
சாதியை மூலதனமாக்கி அரசியல் தொழில் செய்வோரின் அவல அரசியலில் ஆரம்பிக்கும் ஓர் இரவின் ஒரு அநீதி அராஜக அரசியல் கதை, இன்னும் 3 கதைகளோடு விடியும் முன்பாக இணைவதே விழித்திரு.
படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ வகையில் நம்மை கவர்கிறார்கள். வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த், சாரா, தன்ஷிகா, தம்பி ராமையா, எரிகா பெர்னான்டஸ், அபிநயா என அனைவருமே யதார்த்தம் மீறாத கதாபாத்திரங்களாக கதைக்குள் நடமாடுகிறார்கள்.
படத்தின் இரண்டு கதாநாயகிகளையும் எனக்கு இன்னும் பிடித்த நாயகிகளாக்கி இருக்கிறார் அண்ணன் மீரா.
தன்ஷிகா… எப்போதும் என் ப்ரியத்துக்குரிய நாயகிகளில் ஒருவர். அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. தன்ஷிகாவை மிக அழகாக பயன்படுத்தி இருக்கிறார், இயக்குநர் மீரா கதிரவன். தன்ஷிகாவின் திமிர், திறமை, அழகு, அலட்டல், அலட்சியம் அனைத்தையும் விழித்திரு படத்தில் விழிகளுக்கு கடத்துகிறார், மீரா கதிரவன்.
இன்னொரு நாயகி எரிகா பெர்னான்டஸ், இளமையும் புதுமையுமாக எதிர்த்திரையில் வரைந்த ஓவியமாய் இமைகள் திறந்து நிறைகிறார்.
ஒரு இயக்குநர் தயாரிப்பாவது என்பது தாயின் அவஸ்தை தான். கருத்தரிப்பது… வயிற்றுக்குள்ளேயே வளர்ப்பது… வெளி வராத குழந்தைக்காக… தன்னை வருத்திக்கொண்டு… தன் உணவில் இருந்து உறக்கம் வரை அனைத்தையும் மாற்றிக்கொண்டு… காத்திருந்து வெளிக்கொணர்வது வலியும் சுகமும் இணைந்ததொரு அபூர்வ தருணம்.
அப்படி ஒரு அபூர்வ தருணத்தைப் பார்க்க இயக்குநராக மீரா கதிரவன் பட்ட அனைத்து வலிகளையும் தாண்டி இன்றைய பாராட்டுகள் அவரின் வலிகளின் மீது சுகங்களாய் நிறைந்திருக்கும் என நம்புகிறேன்.
அவள் பெயர் தமிழரசி, விழித்திரு தாண்டி… இயக்குநர் மீரா கதிரவன் இன்னும் வீரியமான கதிர்கள் வீசும் விடியலின் கதிரவனாய் ஜொலிக்க என் அன்பின் வாழ்த்துகள். அது என் எதிர்பார்ப்பு. என் நம்பிக்கை.
– முருகன் மந்திரம்