தமிழ் சினிமா விளம்பரத்தை மெர்சலுக்கு முன், மெர்சலுக்குப் பின் என்று பிரிக்கலாம். தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத விளம்பரத்தை மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு வசனம் பெற்றுத் தந்தது. அதிலிருந்தே ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியலையும்,அரசியல்வாதிகளையும் லேசாக சீண்டினால் போதும்படத்திற்கு விளம்பரம் செலவே இல்லாமல் கிடைத்துவிடும் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள்.
அதிலும் சில நடிகர்களும், இயக்குனர்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரிடமும், தலைவர்களிடமும் “சார், எங்க படத்துக்கும் புரமோஷன் பண்ணிக் கொடுங்க ப்ளீஸ்” என்று நேரடியாகவே கிண்டலாய் கூறியதும் நடந்தது. அந்த வகையில் திட்டமிட்டோ, திட்டமிடாமலோ விஜய் ஆண்டணி நடித்துள்ள “அண்ணாதுரை” படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி பல அரசியல் நையாண்டிகளோடு நடந்தேறியது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராதிகா சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், சரத்குமார் ஆகியோர் கிண்டலாய் பல விசயங்களைப் பேசினார்கள்.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “அண்ணாதுரை” என்கிற தலைப்பிற்கே உஙளுக்கு இலவசமாக விளம்பரம் செய்வதற்கு ஒரு கட்சியின் இரண்டு தலைவர்கள் இந்நேரம் தயாராகி இருப்பார்கள். விஜய் ஆண்டனி இனி கவலைப்பட வேண்டியதில்லை, படத்தின் விளம்பர வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சொல்லமுடியாது ரெய்டு கூட வந்தாலும் வரலாம்” என்று கலகல்ப்பூட்டினார்.
ராதிகா சரத்குமார் பேசுகையில், “ஜோசப் விஜய்க்கு விளம்பரம் செய்தது போல் இந்த விஜய் ஆண்டனிக்கும் விளம்பரம் செய்து என் படமும் இருநூறு கோடி ரூபாய் வசூல் செய்தால் மிகவும் சந்தோசம் தான். ரெய்டையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று மேலும் கலகலப்பாக்கினார்.
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “கடுமையாக உழைக்கக் கூடிய ஆளுமைகள் நிறைந்திருக்கக் கூடிய நம் சினிமா தொழிலில் ஒரு சில சோம்பேறி நடிகர்ளும் இருக்கிறார்கள். அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளர்களைப் பற்றிய குறைந்தபட்ச இரக்கம் கூட அவர்களுக்கு இருப்பதில்லை. அப்படித்தான் ஒரு முன்னணி நடிகரால் 18கோடியை இழந்துவிட்டு இன்று நடுத்தெருவில் நிற்கிறார் ஒரு தயாரிப்பாளர். நிச்சயமாக அவருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கும். அந்த நடிகர் மேல் நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை அத்தனை நடிகர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்” என்று சூடேற்றினார்.
பின்னர் பேச வந்த சரத்குமாரும் “ஞானவேல் ராஜா பேசும்போது குறிப்பிட்ட அந்த நடிகரின் பெயரை இங்கேயே இந்த மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்திருக்க வேண்டும். வெறுமனே மொட்டையாக டுவிட்டரில் 140 எழுத்துக்களில் சிலர் அரசியல் செய்வதைப் போல பேசக்கூடாது” என்று தன் பங்கிற்கு போட்டுத் தாக்கினார்.