“ஆஹா, சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை அற்புதமாகக் கலை வடிவமாக்குகிறாரப்பா இந்த பாலா” என்று அபூர்வ கலைஞனாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர் பாலா. ஆனால் பாலா என்கிற இயக்குநருக்கு உண்மையிலேயே புறக்கணிக்கப்பட்ட மக்களின் மீதோ, பெண்களின் மீதோ அக்கறை இருந்திருக்கிறதா? இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சேது தொடங்கி இப்போது படமாக்கப்பட்டு வரும் நாச்சியார் வரை பாலா தேர்ந்தெடுக்கும் கதைக் களமும், கதை மாந்தர்களும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திப் போகிறார்கள் என்பது பாலாவிற்கே வெளிச்சம். இன்னமும் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை பாலா உருவகப்படுத்துவது போல குரூரம் மிக்கதாகத் தான் இருக்கிறதா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
இயல்பான ஒரு படம் செய்யக் கூடிய இயக்குநரையோ, அப்படிப்பட்ட இயக்குநர்களின் படங்களையோ நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை. மாறாக பாலா போன்ற தமிழ் சினிமாவின் சரித்திரத்தை மாற்ற வந்த இயக்குநராகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களின் சினிமாக்களை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில் காவல்துறையையோ, அரசியல்வாதிகளையோ, மருத்துவர்களையோ, வழக்கறிஞர்களையோ திட்டமிட்டே தவறானவர்களாக சித்தரிக்கும் போது அவர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் படியாக இருக்கிறது. ஆனால் எளிய மக்களின் வாழ்வியல் முறை தொடர்ந்து மோசமானதாக காண்பிக்கப்படும் போது, அந்த குரலற்றவர்களின் வாழ்க்கை முறை அதுதான் என்பதாகவே இந்த சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவு செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பாலாவின் நாயகிகள் திருடனை, கொலைகாரனை, பிணம் எரிப்பவனை, அகோரியானவனை விரும்பக் கூடியவர்களாக வந்து படம் நெடுக அந்த நாயகனையே சுற்றித் திரிந்து இறுதியில் கோரமான முடிவை எதிர்கொள்வார்கள். இங்கே இந்த பெண்களுக்கெல்லாம் பாலா செய்திருக்கிற நியாயத்தின் மூலம் இந்த சமூகத்திலிருக்கிற பெண்களுக்கு பாலா சொல்ல வருவதென்ன? “சேது” அபிதா முதல் “தாரை தப்பட்டை” வரலட்சுமி வரை பாலாவின் நாயகிகளிடம் இருந்து எடுத்துக்கொள்ள எதுவுமேயில்லை என்பது உறுத்தும் உண்மை.
படம் முழுவதிலும் மது, கஞ்சா, கொடூர கொலைகள் என மட்டுமே பயணிப்பதும், காணவே அருவெறுக்கும் முடிவுகளையும் மட்டும் தான் எதார்த்த சினிமாவின் இலக்கணமா? என்ற கேள்வி பாலா படங்களைத் தொடர்ந்து பார்க்கும் பாமரனுக்கும் எழும் சந்தேகம் தான்.
விளிம்பு நிலை மக்களுக்குக் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாகக் கொடுத்த கிருஸ்தவ மிஷனரிகளை “பரதேசி” படத்தில் கேலிக்குரியவர்களாக சித்தரித்தெல்லாம் என்ன விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல் தான் “அவன் இவன்” படத்தில் திருட்டை நியாயப்படுத்திவிட்டு மாடுகள் கறிக்காக ஏற்றிப்போவதை பெரிய பாவமெனக் காண்பித்ததை எல்லாம் பேசாமலேயே கடந்து வந்துவிட்டோம்.
தொடர்ந்து பாலா காட்டுவது போலத் தான் எளிய மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? அப்படியே வாழ்ந்தாலும் அவர்களை அப்படியே காண்பிப்பதின் மூலம் இந்த சமூகத்திற்கு பாலா என்ன செய்தியை சொல்ல வருகிறார்? என்பதெல்லாம் யாரும் கேட்கத் துணியாத கேள்வியாகவே தொக்கி நிற்கிறது இன்னும்.
எளிய மனிதர்களை, குரலற்றவர்களின் வாழ்வியலை அழுக்கு மிக்கதாகவும் வன்மம் மிக்கதாகவுமே தொடர்ந்து பதிவு செய்து வரும் பாலா என்னும் மகா கலைஞன் எதிர்காலத்திலேனும் அவர்களுக்கான நியாயங்களையும், காலங்காலமாக ஒடுக்கப்பட்டு அவதியுறும் அவர்களின் சமூக விடுதலைக்கும் தனது குரலை திரை வழியே ஒலிக்கச் செய்வார் என்று நம்பி “நாச்சியார் டீசரையும்” கடந்து போவோம்!