பொதுவாகவே எல்லா வர்க்கத்தினரும் கடனாளிகளாக வாழ்பவர்கள் தான். திருநெல்வேலி நாச்சிமுத்து மட்டுமல்ல உலக பணக்காரராக இருக்கும் நம் அண்ணன் அம்பானி கூட கடனாளி தான். தயாரிப்பாளர் அஷோக் குமார் மட்டுமல்ல மூன்று முதல்வர்களைக் கொண்ட நம் தமிழக அரசும் கூட கடனாளி தான்.
இங்கு எல்லா வகையான தவறுகளுமே மிக இயல்பாகவே நடந்துகொண்டு தான் இருக்கிறது, கண்டு கொள்ளவோ எதிர்த்துக் கேட்கவோ ஆளே இல்லாமல்.அப்படியே யாராவது அத்தகைய அநீதிகளுக்கு எதிராக போராடினாலும் அதை வெறும் செய்தியாக மட்டுமே கடந்து போகிறவர்கள் தான் நம்மில் பெரும்ப்பாலானோர். அனிதா நீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்காடிய போது, நமக்கெல்லாம் அந்த சிறுமியிடம் இருந்த தைரியம் கூட இல்லாமல் தான் இருந்தோம். ஆனால் அவளது இறப்பு தான் நமது மனசாட்சியை உலுக்கிக் கேள்வி எழுப்பியது.
திருநெல்வேலி நாச்சிமுத்து காவல் துறைக்கும், ஆட்சியர் அலுவலகத்திற்கும் நடையாய் நடந்த போது.. அந்த அதிகார வர்க்கம் அவரை அசிங்கப்படுத்தி வந்த போது.. அதெல்லாம் நம் காதுகளுக்கு செய்தியாகக் கூட வரவில்லை.
இப்படித்தான் பலரது குமுறல்களை இந்த அரசாங்கமும், நாமும் அலட்சியமாய்க் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கான நியாயங்களைப் பற்றி நம்மை பேச வைக்க அவர்கள் இறுதியாக மரணத்தையே ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள். இங்கு மரணங்களைத் தான் நாம் முக்கியச் செய்தியாகவே எடுத்துக் கொள்கிறோம். இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் “திடீர் நகரில்” நடக்கிற அராஜகங்கள் எல்லாம், ஏதாவது மரணம் நிகழ்ந்தால் மட்டுமே ஒரு வரி செய்திக்குக் கூட தகுதி பெறும். இதுதான் இன்றைய இயல்பான நடைமுறை.
அப்படித் தான் இன்று தமிழ்த் திரையுலகினர் பலரின் வாழ்க்கையும் இருக்கிறது. வெளி உலகத்தினரால் அறியப்பட்டுள்ள பிம்பங்களுக்குள் சிக்கிக்கொண்டு, தங்கள் இயல்பான வாழ்க்கைச் சிக்கல்களை மறைத்துக் கொண்டு வாழ்பவர்களே இங்கு அதிகம். காரணம், சினிமாக்காரர்களின் சொந்த வாழ்க்கையை, அந்தரங்கத்தை உடனே பரபரப்பு செய்தியாக்க அவர்களது வாசலிலேயே நாம் காத்திருக்கிறோம்.
இங்கே கோடிகளில் புரள்பவர்களாக வெளியுலகினரால் நினைத்துக்கொள்ளப் பட்டுள்ளவர்களின் சொந்த வாழ்க்கை என்னவாக இருக்கிறதென்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. அதற்கு, தற்கொலை செய்துகொண்ட கோ- புரொட்யூசர் அசோக்குமார் ஒரு சமீபத்திய உதாரணம்.
இங்கு எல்லா படங்களுமே கடன் பெற்றுத் தான் தயாரிக்கப்படுகின்றன. இங்கே பல தயாரிப்பாளர்கள் படமெடுத்துக் கொண்டிருப்பதே இந்த படத்திலாவது நம் முந்தைய படத்தின் கடனை அடைத்துவிட மாட்டோமா? என்கிற நம்பிக்கையிலும், வேறு வழியில்லாமலும் தான். மிகப்பெரிய பண முதலைகள் எல்லாம் அரசியல் பலத்தோடு இன்று இந்த சினிமாத் துறையை சுரண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் வெளியில் வந்து பேச சம்பந்தப்பட்டவர்களுக்கே ஒரு மரணம் தேவைப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களைப் போல ஒரு படத்தை எடுத்து சுதந்திரமாக இப்போதெல்லாம் வெளியிட்டு விட முடிவதில்லை. படத்தின் தரத்தையும் அதற்கான வியாபாரத்தையும் பொறுத்து கட்டப்பஞ்சாயத்து செய்ய, மிரட்ட என்று ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பல் ஒவ்வொரு தயாரிப்பாளரின் வாசல் முன்பும் நிற்கிறார்கள். தணிக்கை வாரியமே இப்படிப்பட்டவர்களோடு கைகோர்த்துக் கொண்டு ஆடும் ஆட்டமெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவரப் போவதேயில்லை. தொழில் போய்விடுமே? இதை விட்டு வெள்யே போனால், பல சினிமாக்காரன் கரையொதிங்கிய மீனாகத் தான் போவான்.
நடிகனின் சம்பளம் தொடங்கி, படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகான இன்ஸ்டண்ட் விமர்சனம், அடுத்த நாளே வெளியாகும் “ஆன்லைன் திருட்டுத்தனம்” என அத்தனையுமே ஒரு தயாரிப்பாளரை சாவிற்கு இட்டுச் செல்லும் காரணிகள் தான்.
முறைப்படுத்தப் படாத இந்த சினிமாத் தொழிலை நம்பி கோடிக் கணக்கில் பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர் முதல் அன்றன்றைக்கு வரும் “பேட்டாவை” நம்பிக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிற டிக்கட் கிழிப்பவர்கள் வரை பலர் இருக்கிறார்கள்.
கோடியாய் கோடியாய் பணத்தை இறைத்து விட்டு, திரும்பி வருமோ வராதோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலைவதில் சினிமாவை போல் வேறொரு தொழில் இங்கு இருக்கவே முடியாது. ஆனால் இதுபற்றியெல்லாம் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் “தமிழ் ராக்கர்ஸ் வாழ்க” என்று ஸ்டேடஸ் போடும் நாமெல்லாம் இன்னும் பல தயாரிப்பாளர்களைக் கொல்லும் வல்லமை கொண்டவர்கள்.
அசோக் குமாரின் மரணத்தில் அன்பு செழியனுக்கு மட்டும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. படத்தைத் திருடி இணையத்தில் பதிவேற்றிய திருடர்களுக்கும், விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தைக் குத்திக் கிழிக்கும் சிலருக்கும், அடுத்தவர் உழைப்பை உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அந்த இணையத் திருட்டை ஊக்குவிக்கிற நமக்கும் கூட பெரும்பங்கு இருக்கிறது!