தமிழ்த் திரைப்படத் துறையில் பத்திரிகையாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து வரும் ‘தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம்’ தனது பொன் விழாவை கொண்டாட இருக்கிறது.
இந்த சங்கம் ஆரம்பித்து இப்போது 60 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த சங்கத்தை தமிழ்த் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையில் முதன்முறையாக மக்கள் தொடர்பாளர் பணியை துவக்கியது குறித்து பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்.
அவர் இது குறித்து எழுதும்போது, “1958-ம் ஆண்டில் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.
ஒரு தகவலை தெரிந்து கொள்ளும்பொருட்டு அந்த அலுவலகத்திற்கு நான் சென்றபோது ஆர்.எம்.வீ.யின் மேஜையில் ‘நாடோடி மன்னன்’ படத்தின் புகைப்படங்கள் இருந்தன. அந்த நாளில் திரைப்படங்கள் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் அனுப்புவது வழக்கம். இது எனக்கும் தெரியும் என்றாலும், நாமே ஏன் இதை பத்திரிகையாளர்களுக்கு வழங்கக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.
உடனே நான் ஆர்.எம்.வீ.யிடம் ‘ஐயா… பத்திரிகையாளர்கள் அனைவருமே எனது நண்பர்கள்தான், இந்த புகைப்படங்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா..?’ என்று கேட்டேன். ‘பத்திரிகைகளில் படத்தின் புகைப்படங்கள் வர வேண்டும், அதை யார் கொடுத்தால் என்ன…? நீங்களே கொடுங்களேன்..’ என்று சொல்லி ‘நாடோடி மன்னன்’ புகைப்படங்களை என்னிடம் கொடுத்தார் ஆர்.எம்.வீரப்பன்.
உடனேயே நான் சென்னையில் இருந்த அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் பேருந்திலும், கால்நடையாகவும், சைக்கிளிலும் பயணித்து ‘நாடோடி மன்னன்’ படத்தின் புகைப்படங்களை கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ‘நாடோடி மன்னன்’ படத்தின் புகைப்படங்கள் வெளிவந்தன.
இதைப் பார்த்துவிட்டு இதைச் செய்தது யார் என்று ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டறிந்த எம்.ஜி.ஆர். என்னை நேரில் அழைத்து பெரிதும் பாராட்டினார். ‘திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள்’ என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணம் இந்த சம்பவம்தான். இதன் பின்பு எம்.ஜி.ஆரின் அனைத்து படங்களுக்கும் என்னையே பி.ஆர்.ஓ. வேலை பார்க்க வைத்தார் எம்.ஜி.ஆர்..” என்று தனது சினிமா மக்கள் தொடர்பாளர் பணி துவங்கியது பற்றி சொல்லியிருந்தார் மறைந்த திரையுலக பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.
இதற்குப் பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட எல்லோருடைய படங்களிலும் பணியாற்றினார் ஆனந்தன். கிட்டத்தட்ட 1500-க்கும் மேற்பட்ட படங்களில் மக்கள் தொடர்பாளர் பணியினைச் செய்திருக்கிறார். அப்போதிருந்து தான் மறையும்வரையிலும் திரையுலகத்துக்கெனவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் அவர். திரையுலகம் சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களை முழுமையாகத் திரட்டியவரும் அவர் ஒருவர்தான்.
அது மட்டுமின்றி வருடா வருடம் ஜனவரி தொடக்கத்தில் தமிழ்த் திரைப்படங்களின் புள்ளி விவரம் என்கிற பெயரில் ஒரு சின்ன புத்தகத்தைத் தயாரித்து எல்லோருக்கும் கொடுப்பார். விக்கிபீடியா வருவதற்கு முன்பாக அவருடைய புள்ளி விவரங்கள் மட்டுமே ஊடகங்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கே பெரிதும் உதவியது.
ஆக… அந்த பிதாமகன் ஆனந்தன் மூலம்தான் செய்தி ஊடகங்களுக்கும், திரைப்படத் துறைக்கும் பாலமாக இருந்து திரைப்படத் துறை குறித்தான செய்திகளை மக்களிடையே கொண்டு போய் சேர்க்கும் ‘தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள்’ என்ற அமைப்பே உருவானது.
இத்தனைக்கும் எம்.ஜி.ஆர், பி.ஆர்.ஓ.வாக அறிமுகப்படுத்திய பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு, கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருது கொடுத்ததும், தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆவணப் பணிகளுக்கு ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிதியுதவி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று அந்தத் துறையில் 60-க்கும் குறைவான மக்கள் தொடர்பாளர்கள்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் டாக்டர்கள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இணையாக 24 மணி நேரமும் முழிப்புடன் இருந்து தமிழ்த் திரையுலகம் தொடர்பான செய்திகளை பத்திரிகையாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.
இந்த ‘மக்கள் தொடர்பாளர்’ என்ற துறையை ஏற்படுத்திக் கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, அவரது நூற்றாண்டு விழாவையும், திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் விழாவையும், ‘மக்கள் தொடர்பாளர்கள் சங்க’த்தை முறையாகப் பதிவு செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து வரும் ஜனவரி 3, 2018 அன்று முப்பெரும் விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள் தற்போதைய சங்க நிர்வாகிகள்.
இந்த விழாவை, அரசியல் கலப்பில்லாமல் முழுக்க, முழுக்க திரைப்படத் துறை சார்ந்த விழாவாகக் கொண்டாட முடிவு செய்து பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர், தமிழக கவர்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் திரைப்படத் துறையின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட 76 பேரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அன்றைய விழாவில் இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் குழுவினர் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைக்கவுள்ளார்கள். நடன அமைப்பாளர் கலா குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜய முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரம்மாண்ட அளவில் செய்து வருகிறார்கள்.
இந்த முப்பெரும் விழா, எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ‘கலைவாணர்’ பெயர் தாங்கிய கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருப்பதும், கலைவாணரின் பேத்தியான பாடகி ரம்யா, அன்றைய விழாவில் கடவுள் வாழ்த்து பாடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான அறிவிப்புக் கூட்டம் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம்ஸ் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவரான டைமண்ட் பாபு, செயலாளரான பெருதுளசி பழனிவேல், பொருளாளரான விஜயமுரளி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.