full screen background image
Search
Thursday 28 November 2024
  • :
  • :
Latest Update

சங்குச்சக்கரம் – விமர்சனம்!

குழந்தைகளுக்கான படமெடுத்து, அந்த குழந்தைகளின் மூலமாகவே மிக எளிமையாக பகுத்தறிவு பேசியிருக்கிறார் இயக்குநர் மாரிசன். வெல்கம் ப்ரோ!.

இத்தனைக்கும் இது பேய்ப்படமாம்.

பேய் என்றால், காலங்காலமாக கண்டிப்பாக ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அந்தப் பேய் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்கக் காத்திருக்கும்.
ஆனால் இது எதுவுமே இல்லை இந்தப் பேய்ப் படத்தில்.

மாறாக, கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்தப் பேய் நம்மையும், நாம் வாழ்கிற இந்த சமூகத்தையும் அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அந்தப் பேய் சொல்கிற அத்தனையும் இந்த சமூகத்தில் நடப்பதாலும், நாமும் அது சொல்வது போல்தான் வாழ்ந்து கொண்டிருப்பதாலும் நம்மால் அவமானப்பட மட்டுமே முடிகிறது.

இது நிஜமாகவே சூப்பர் பேய்.

படம் முழுவதும் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கேள்விகளை எல்லாம் குழந்தைகளைக் கொண்டே கேட்க வைத்திருப்பதனால், இந்த தலைமுறை குழந்தைகளின் அறிவாற்றலையும்,
எண்ணங்களையும் பிரதிபலிப்பதாய் இருக்கிறது.

“மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு மனப்பாண்மை வரக் கூடாது என்பதற்குத்தான் யூனிஃபார்ம் என்றால், அப்புறம் ஒவ்வொரு பள்ளிக்கும் வேறு வேறு யூனிஃபார்ம் ஏன் ?” என்ற கேள்வி மிக முக்கியமானது.

அதேபோல், “எல்லோருமே சொர்க்கத்திற்கு போகணும்னு தான் ஆசைப்படுறாங்க.. அங்க அவ்ளோ சந்தோசம் கிடைக்கும்னா இங்க வாழ்ந்து ஏன் கஷ்டப்படணும்?. பேசாம செத்து சொர்க்கத்துக்கு போயிடலாமே!”
என அந்த சிறுவன் கேட்பது எத்தனை நிதர்சனம்?.

“எந்தப் பேயும் தன் குழந்தைகளை எஞ்சினியர் ஆகணும், டாக்டர் ஆகணும்’னு டார்ச்சர் பண்றதில்லை” என்று சொல்லி, இன்றைக்கு குழந்தைகளை பாடாய்ப் படுத்தும் பெற்றோர்களை பேயை விட மோசமானவர்கள்
என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இப்படி படம் முழுக்க இந்த சமூகத்தை பேயின் மூலமாக பகடி செய்துகொண்டே இருக்கிறார் மாரீசன். வசனங்களெல்லாம் அவ்வளவு கூர்மையாக இருக்கிறது.

பேயிடம் சென்று நீ எந்த ஜாதிப்பேய் என்று கேட்பதன் மூலம், இந்த சமூகத்தின் எதார்த்த மனநிலையை அப்படியே பிரதிபலிக்கச் செய்திருப்பது மிக சிறப்பு. இங்கே பலபேர் இன்னும் அப்படிப்பட்டவர்களாகத் தானே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?.

ஒரு குழந்தைத் திருடன், இரண்டு பணத்தாசை பிடித்த கார்டியன்கள், ஒரு குட்டிப்பேய், ஒரு பெரிய பேய், 9 வாண்டுகள், இரண்டு உள்நாட்டு பேயோட்டி, இரண்டு ஃபாரீன் பேயோட்டி, ஒரு காதல் ஜோடி, ஒரு ரியல் எஸ்டேட் ரவுடி இவர்களுடன் ஒரு பழைய அரண்மனை பங்களா. அந்த பங்களாவிற்குள் இவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

யாரையும் பயமுறுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட பேய்ப்படம் இல்லை என்பதால், கிராஃபிக்ஸ் மற்றும் சவுண்ட் மிக்ஸிங் குறைகள் பெறியதாகத் தெரியவில்லை. ஆனால் முதல் பாதி ஏனோ தானோ என்று நகர்வதும்,
திலீப் சுப்புராயனின் ஒவர் ஆக்டிங்கும் படத்தை பின்னோக்கி இழுத்திருக்கிற காரணிகள்.

அதேபோல், பின்னணி இசை படத்திற்கான மனநிலையோடு ஒத்துப்போகவில்லையோ என்று தோன்றுகிறது.

சங்குச்சக்கரம் நன்றாக சுழன்று தீப்பொறி கிளப்பியிருப்பதற்கு மாரிசனின் வசனங்கள் மட்டுமே முக்கிய பங்காற்றியிருக்கின்றன. வசனங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் மிக சாதாரணமான
பேய்ப்படமாகவே கடந்து போயிருக்கும்.

படம் முடிந்து பெரிய பேய், அந்த சிறுவன் வந்து கேட்டால் பதில் சொல்வதற்காக “என்சைக்லோப்பீடியா” முதற்கொண்டு உலகின் தலைசிறந்த பொது அறிவுப் பெட்டகங்களை எல்லாம் படித்துக் கொண்டிருக்கும். அப்போது அங்கே வரும் சிறுவன்,

“ரஜினி அங்கிள் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?” என்று கேட்க, பேய் விழி பிதுங்கி நிற்கிறது. தியேட்டர் சிரிப்பொலியால் அதிருகிறது.

லாஜிக் அது இதென்று எதுவும் நோண்டாமல்,  மாரீசனின் ட்ரோலிங் லெவலுக்காகவே படத்தைப் பெரியவர்களும் பார்க்கலாம்!