full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

ஆம்பள மனோரமா, பொம்பள கமல் : வர்ணித்த விக்னேஷ் சிவன்

ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக உருவாகுவதற்கு முக்கியமான காரணம். நான் `ஸ்பெஷல் 26′ படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து, புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.

நான் சூர்யா நடித்த `காக்க காக்க’ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன்.

இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல் ஹாசன் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர். இவரை பொம்பள கமல்ஹாசன் என்று கூறலாம். அதேபோல் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவரை ஒரு ஆம்பள மனோரமா என்று கூறலாம். அந்த அளவுக்கு அவர் பிசியாக நடித்து வருகிறார்.

அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். தற்போது வரை எனது படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய பங்காற்றி இருக்கிறது என்று கூறலாம்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசிய போது, `தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்றைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்க்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன். `தானா சேர்ந்த கூட்டம்’ `ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம்.

ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார் விக்னேஷ் சிவன். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் புதுமையான சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்.” என்றார்.