“ஹரஹர மஹாதேவ்கி” படத்திற்குப் பிறகு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வரும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து”.
இப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, “ஸ்டுடியோ கிரீன்” சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
“ஹரஹர மஹாதேவ்கி” முழுக்க முழுக்க அடல்ட் காமெடியாகவே இருந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக
நன்றாகவே கல்லா கட்டியது. எனவே, அதே வகையிலான படமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பே ஆபாசமாக இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
இந்த கருத்திற்கு இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயகுமார் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்தப் படம், “அந்த” மாதிரியான படம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தைப் பற்றி இயக்குநர் சொல்லியிருப்பதாவது,
“அப்படியெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை. முதல் கதை அப்படியாக அமைந்தது. அந்தப்படம் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அதே டீம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். அதுதான், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆனால், இது தொடர்ச்சியாக நடக்கிறது இல்லை. எனது அடுத்த படம் ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’. அந்தப் படத்திற்கும் எனது இந்த இரண்டு படங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. அதேமாதிரி அடல்ட் காமெடி என்பது வேறு, செக்ஸ் காமெடி என்பது வேறு. இங்கே இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள். காலேஜில், வேலை செய்யும் இடத்தில் எப்படியெல்லாம் பேசிக் கொள்கிறோமோ, அதுதான் அடல்ட் காமெடி. இதில் முகம் சுழிக்கிறமாதிரி இருக்காது” என்றார்.