full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் உயிர்பெற்ற மஜித் மஜீதியின் நம்பிக்கை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில்,‘இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த கௌதம் கோஷையும் திரைக்கதையில் முன்னிறுத்திருக்கிறார். இது போன்ற சிந்தனை மஜீதியின் தனி சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றியதில் மட்டற்ற சந்தோஷத்தை பெற்றிருக்கிறோம். மேலும் நாமா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருப்பதால் இந்த திரைப்படம் உலகளவில் முக்கியமான கவனத்தைப் பெறும் என்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷரீன் மன்ந்ரி கேடியா பேசுகையில்,‘இந்திய மக்களின் ரசனையையும், சென்ட்டிமெண்ட்ஸையும் இயக்குநர் மஜீதியால் எப்படி துல்லியமாக கையாள முடிந்தது என்பதைப் பார்த்து நம்பமுடியாத வகையில் ஆச்சரியப்பட்டேன். கதைகள் மொழியின் வரம்புகளுக்கு உட்படாதவை என்ற அவரது நம்பிக்கை இதில் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. ஒரு நேர்மையான உணர்வை திரைமொழியில் சொன்னால், அது பார்வையாளர்களின் இதயத்தைத் தொடும் என்பதை இதன் மூலம் மீண்டும் மஜீதி நிரூபித்திருக்கிறார்.’ என்றார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா பேசுகையில்,‘நடிகர்கள் இஷான் கட்டார் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவர்களும் இயக்குநர் மஜீதியின் வழிகாட்டலை உறுதியைப் பின்பற்றி, அவர் காட்டும் புதிய உலகை பார்வையாளர்களுக்கும் காட்டியிருக்கிறார்கள். இந்த படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.‘ என்றார்.

இதனிடையே இந்த படம் ஒராண்டிற்கு முன்னர் (29 1 2017) இதே நாளில் மும்பையிலுள்ள முகேஷ் மில்லில் முதல் நாள் படபிடிப்புடன் தொடங்கியது. இன்று அதே நாளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்த படக்குழுவினருக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.