full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மறுபடியும் ஸ்டிரைக்… இந்த முறையாவது மாற்றத்தை தருமா?

பைனான்ஸ், ஆன்லைன் டிக்கெட் விற்பனை, ரிலீஸ் என சினிமாவைப் பொறுத்தவரை எதுவுமே முறைப்படுத்தப்படாமல் தான் இருக்கிறது இன்னும்.

வட்டிக்கு வாங்காமல் படம் எடுப்பவர்கள் கூட, ரிலீசுக்கு திக்குமுக்காடித் தான் போகிறார்கள் ஒவ்வொரு முறையும். காரணம் வினியோகஸ்தர்கள், அவர்களைக் கட்டுப்படுத்தும் “நிழல் உலகம்”.

ஒரு படத்தை செலவு செய்து எடுத்து முடிப்பதை விட, சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வது தான் இப்போது தயாரிப்பாளர்கள் முன்னிருக்கும் மாபெரும் சவால். இந்த தொல்லைகளை எல்லாம் கண்டு தான், பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சினிமாத் துறையை விட்டே விலகி விட்டன என்ற பேச்சும் இருக்கிறது இங்கே.

இப்படி ஒட்டுமொத்தமாக ரிலீசை அடக்கியாள்பவர்கள் யார்? அவர்களது நோக்கம் தான் என்ன? இங்கே வெளிச்சத்திற்கு வந்தவர் ஒரே ஒரு அன்புச்செல்வன் மட்டும் தான். அவரை விட முதலைகள் தமிழ் சினிமாவின் நிழல் உலகில் ராஜாக்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மைச் செய்தி. இவர்களைப் பற்றி அரசிடம் சொல்லலாம் என்றால், வேரே அங்கிருந்து தான் கிளைத்திருக்கிறது என்பதை அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் அனுசரிக்க ஆரம்பித்திருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் வட்டிக்கு வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அவர்கள் யாரிடம் எவ்வளவு வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். இப்படி வெளிப்படையாக செய்யும் பட்சத்தில் “நிழல் உலக” ராஜ்ஜியத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யலாம். இவர்களை தாண்டி படம் வந்தால், ஆன்லைன் புக்கிங்கில் நடைபெறும் கொள்ளை என்பது பெரும் தொல்லையாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர் சங்கமும் முதலில் புரிதலோடு இணைந்து டிக்கெட் விற்பனைக்கென்று தனியாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும். நேரடியாக அனைத்து டிக்கெட்டுகளையும் அதிலிருந்தே விற்பனை செய்ய வேண்டும். முக்கியமாக ரிலீஸ்.. ஒரு படம் தொடங்கப்பட்ட தேதி அடிப்படையில் ரிலீசிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பல சிறிய தயாரிப்பாளர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும். மாறாக “சிறிய தயாரிப்பாளர்கள்” காக்கப்பட வேண்டும் என மேடைக்கு மேடை பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

வலியது பிழைக்கும் என்பது சிறு தயாரிப்பாளர்களின் வயிற்றிலடிக்கும் செயல் தான். முக்கியமான இன்னொன்று, அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் செய்து கொண்டும். அரசாங்கத்திடம் சினிமாவைக் காப்பாற்றும்படி கோரிக்கை வைத்துக் கொண்டும் ஒரே நேரத்தில் இரண்டு முகம் காட்டுபவர்களால் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியையும் சினிமாவிற்குப் பெற்றுத் தரவே முடியாது. காரணம், அது வேறு.. இது வேறு என்று பிரித்துப் பார்த்து செயல்படத் தெரிந்தவர்கள் அல்ல நம் ஆட்சியாளர்கள். “அவன்தானே இவன்” என்று கிடைத்த இடத்தில் வைத்து செய்ய நினைப்பவர்கள் தான் நம்மவர்கள்.

எனவே சூழ்நிலையை புரிந்து, எடுத்தோம் கவிழ்த்தோம் என மைக் கிடைத்தவுடன் படத்தில் பேசுவதைப் போல் பேசாமல் சாதக பாதகங்கள் ஆராய்ந்து செயல்படுவதே பலருக்கும் நன்மை பயப்பதாய் அமையும். முதலில் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் இன்னும் இருக்கிற சங்கங்களெல்லாம் கலந்து பேசி ஒற்றுமையாய் செயல்படாமல் எந்த ஸ்டிரைக்கும் இங்கு எதையும் மாற்றிவிடப் போவதில்லை.