full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

பரியேறும் பெருமாளையும், மாரி செல்வராஜையும் கொண்டாடிய இயக்குநர் ராம்!!

 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

*இயக்குநர் ராம்*
“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகி, ஆனந்த விகடனில் வெளியான மறக்கவே முடியாத தொடர் “மறக்கவே நினைக்கிறேன்”மூலம் தமிழக மக்களை தன் வசப்படுத்திய மாரி செல்வராஜின் முதல் படம்.. அல்லது முதல் கோபம்னு கூட சொல்லலாம். அவனுடைய இயலாமை, அவனுடைய ஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல் வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம் இது எல்லாத்தோட மொத்த வெளிப்பாடா இந்தப் பாட்டு இருக்கு.

“பரியேறும் பெருமாள்” கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தையும் உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன் அவர் குரலிலும் இசையிலும் மிகச் சிறப்பா கொண்டு வந்திருக்கார்.

பா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு அட்டகத்தி மூலமா அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரைக்கும் அட்டகத்தி, தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவில் ஒண்ணு. தமிழ் சினிமாவில் அதுவரை பார்க்காத ஒரு திரைமொழியையும் அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட ஒரு படம். பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும் நீலம் புரொடக்சனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

*பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து*
“கருப்பி பாடலில் வெளிப்படையாக ஒலிக்கும் வலியும் அடிநாதமாக கேட்கும் விடுதலை உணர்வும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. வாழ்த்துக்கள்”.

*’மூடர் கூடம்’ இயக்குநர் நவீன்*
“உள்ளுக்குள் புதைந்து கிடந்த வலியை ஒரு பாட்டாக மாற்றியிருக்கிறார்கள். “கருப்பி என் கருப்பி” என் மொத்த கவனத்தையும் திருடிக்கொண்டிருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார்.

*இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி*
பரியேறும் பெருமாள் கருப்பி பாட்டு ரொம்ப தனித்துவமா இருக்கு. இசை, வரிகள், பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப உயிரோட்டமா இருக்கு. படம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது.

*பாடலாசிரியர் முருகன் மந்திரம்*
ஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக கடந்துபோகக்கூடாது. கேட்கிறவங்களோட சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும். கருப்பி பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங்களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது.