full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு – தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்!!

ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இன்று கேரளாவில் இருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு இன்று வந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ள நிலையில், இதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரத யாத்திரைக்கு தடை கோரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அப்போது, ‘ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. 5 மாநிலங்களில் ரதயாத்திரை நடந்துள்ளது. அங்கெல்லாம் பிரச்சினை இல்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக ரத யாத்திரை நடந்துள்ள நிலையில் தமிழகத்தில் எதிர்ப்பது ஏன்? தமிழகத்தில் யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை உண்டு. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்’ என்றார் முதல்வர்.

முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். பின்னர் சபாநாயகரின் இருக்கை முன் அமர்ந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்பதும் ஏற்க மறுப்பது அவர்களின் விருப்பம். ஆனால், அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார். அப்போதும் தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி வெளிநடப்பு செய்தார். 

தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து  அனைவரும் சட்டசபையில் இருந்து வெளியேறினர்.