கிட்டத்தட்ட போர்க்களமானது சேப்பாக்கமும், அதன் சுற்று வட்டாரமும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது என எதிர்க்கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. அதையும் மீறி போட்டிகள் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக அரசிற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அரசுத் தரப்பிலும், ஐபிஎல் தரப்பிலும் என்ன ஆனாலும் திட்டமிட்டபடி போட்டியை நடத்தியே தீருவது என உறுதியாக இருந்தார்கள். மைதானத்திற்கு 4000-த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் ட்டார்கள். அந்தப் பகுதி முழுவதும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது. ரசிகர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர் பச்சான், கௌதமன், வெற்றிமாறன், மு.களஞ்சியம், எம்எல்ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் அறிவுறித்தபடியே மாலையில் திரளாக சேப்பாக்கம் பகுதியில் கூடினார்கள்.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி முன்னேற, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போகப்போக நிலைமை கட்டுக்குள் வராமல் போக காவல்துறையினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டார்கள். இதில் இயக்குநர் வெற்றிமாறன் மீது மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களிடம் ஆவேசமாக முறையிட்டார்கள் இயக்குநர் களஞ்சியமும், வெற்றிமாறனும். இதில் வெற்றிமாறனுக்கு மார்பு பகுதியில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.