full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தப்பியது இரும்புத்திரை.. ரிலீசில் மாற்றமில்லை!!

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். வருகிற மே 11 -ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது மக்களின் நலனுக்காக ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து இரும்புத்திரை படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்றுள்தால், அந்த காட்சிகளை நீக்கப்படும் வரை படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் இந்த காட்சிகளுடன் படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா, மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவும் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட நேரிடும் எனவும் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெற்று வெளியாக உள்ள இந்த படம் குறித்து படம் வெளிவரும் முன்னரே மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.