காலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

News

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப்படங்களுக்கு ரூ.176.44,  ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள  அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகமானக் கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95% இருக்கைகள் நிரம்பியிருந்தன.  அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் தான் சட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைக் கூறுகின்றனவா, இல்லையா? என்பது ஒருபுறமிருக்க அவரது திரைப்படங்களை, அவை வெளியாகும் நாளிலோ, அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்த சில நாட்களிலோ கண்டு மகிழ வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் லட்சியம் ஆகும். இதற்காக, ரஜினியின் ஏழை ரசிகர்கள் கூட கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்ட தயாராக உள்ளனர். ரசிகர்களின் இந்த பலவீனம் தான் நடிகர் ரஜினி மற்றும் அவரது படத் தயாரிப்பாளர்களின் பலம் ஆகும். ஆனால், இந்தக் கலாச்சாரம் தான் சட்ட விரோத கள்ளச்சந்தையை ஊக்குவிப்பதுடன், ஏழை ரஜினி ரசிகர்களை கடன்காரர்களாக்குவதற்கும் வகை செய்து வருகிறது.

ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். உரிமைகளுக்காக போராடுவது சமூகவிரோதிகளின் செயல் என்று அவர் கூறினாலும் கூட, தமது திரைப்படத்தில் கைத்தட்டல்களை வாங்குவதற்காக உரிமைகளுக்காக அவர் போராடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்; விதிமீறல்களையும், ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பது தான் நடிகர் ரஜினிகாந்தின் நோக்கம் என்றால், அதற்கான நடவடிக்கைகளை தமது திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.

அதற்காக தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தமது ரசிகர்களுக்கு  நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ, காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதை தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும்  நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். அப்போது தான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்.