full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

சமுத்திரகனியுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி – கௌதம் வாசுதேவ் மேனன்

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
 
எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக்.
 
அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள்,  நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி.
 
சமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்பார். ஆனால் கதைக்கு ஏற்ற்வாறு பேச சுதந்திரம் கொடுத்தார். கோலி சோடா படத்தில் மார்க்கெட் ஃபைட் மாதிரி இந்த படத்திலும் ஒரு சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். கௌதம் மேனன் சார் இந்த படத்துக்குள் வந்த பிறகு படம் பெரிய படமாக மாறியது. என் சித்தப்பா லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸுக்கு நன்றி என்றார் வினோத். 
 
விஜய் மில்டன் என்னை நடிக்க கூப்பிட்டார், யாரெல்லாம் நடிக்கிறாங்கனு கேட்டேன். சமுத்திரகனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரகனி. அவர் எனக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம் என்றார் கௌதம் வாசுதேவ் மேனன். 
 
 
கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம். நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு பொண்டாட்டி பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார். சமுத்திரகனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. 
 
விளம்பரம் செய்யும் செலவை விட்டு விட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்கு தேவையான விஷயங்களை கொடுப்போம் என முடிவு செய்தோம். சென்னையில் சூர்யா அதனை தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகிறது. மதுரை காந்திமதி அம்மா, கோவையில் ராஜா சேது முரளி ஆகியோரை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் விஜய் மில்டன். 
 
நாங்கள் கோவையில் வீணாகும் உணவை வாங்கி, இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். தினமும் இந்த சாப்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நோட் புக் கொடுக்கிறோம். ஏழ்மையில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் உதவிகளை செய்து வருகிறோம். சமீபத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல குறைந்த வண்டியை வாங்கி கொடுத்திருக்கிறோம் என்றார் ராஜா சேது முரளி. 
 
வடலூரில் ஒரு சில அன்பர்கள் தேவையான உதவியை செய்கிறோம், நீங்கள் உணவு அளிப்பதை நிறுத்தக் கூடாது என்று ஊக்குவித்தனர். அதை பார்த்த நிறைய பேர் உதவி செய்கிறார்கள். வள்ளலார் ஆசியோடு இதை செய்து வருகிறோம் என்றார் காந்திமதி அம்மா. 
 
நடிகர்கள் சமுத்திரகனி, இசக்கி பரத், நாயகிகள் சுபிக்‌ஷா, கிரிஷா குரூப், கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி, பசங்க கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.