full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

பூகம்பமா? புஷ்வானமா? யார் இந்த ஸ்ரீரெட்டி?

தெலுங்கு சினிமாவினரை அல்லோல கல்லோலப் படுத்திவிட்டு, தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது “ஸ்ரீரெட்டி லீக்ஸ்” புயல். எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் முருகதாஸ் பெயரை சொன்ன ஸ்ரீரெட்டி, “க்ரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா ஜி?” என எடுத்து விட்டதும் ஆடித்தான் போனது மொத்த தமிழ்த் திரையுலகமும். இருக்காதா பின்னே, முருகதாஸ் என்ன சாதாரணமான ஆளா கோலிவுட்டில்??

முதல் பாலிலேயே சிக்சர் அடித்து அலற விட்ட ஸ்ரீரெட்டி, அடுத்து வீதிக்கு இழுத்து வந்தது நடிகர் ஸ்ரீகாந்தை. “5 வருடங்களுக்கு முன்னால் ஹைதராபாத் பார்க் ஹோட்டல் நினைவிருக்கும் என நம்புகிறேன்” என கொளுத்திப் போட ஸ்ரீகாந்துக்கு மட்டுமல்ல மற்ற நடிகர்களுக்கும் பேயடித்தது போலத் தான் இருந்திருக்கும். அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என தெளிவு பிறக்கும் முன்னமே, அசராமல் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டு தெறிக்க விட்டார் அம்மணி.

அந்த பேஸ்புக் பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ், தன்னைத் தவறாக பயன்படுத்திக் கொண்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் ஸ்ரீரெட்டி.

“என் நண்பர்கள் சிலரின் மூலமாக லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு அறிமுகமானார். அந்த நாளில் நாங்கள் கோல்கொண்டா ஹோட்டலின் லாபியில் சந்தித்தோம். அப்போது என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். நான் அறையில் நுழைந்தவுடன் குரு ராகவேந்திர ஸ்வாமி புகைப்படம் மற்றும் சில ருத்ராக்ஷங்கள் அனைத்தையும் பார்த்தேன். அதற்குப் பிறகு அவர் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்த கதையைச் சொன்னர். புதிதாக வருபவர்களுக்கு உதவி செய்து வருவதையும் கூறினார், நான் அவரை நம்பத் தொடங்கினேன். அவர் பல ஏழைக் குழந்தைகளுக்கு தங்குமிடம் கொடுக்கிறார் என்று சொன்னார்..நான் ஈர்க்கப்பட்டேன் .. மெதுவாக மெதுவாக அவர் தனது உண்மையான நிறத்தை காட்டினார். அவர் என் வயிற்றுப் பகுதியைக் காட்டச் சொன்னார், மேலும் சில மோசமான அசைவுகளையும் செய்துக் காட்டச் சொன்னார். அவர் ஆசை முடிந்த பிறகு, கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்றார். அதன் பிறகு சில நாட்கள் எங்கள் நட்பு தொடர்ந்தது. பெல்லம் கொண்டா வில்லன் ஆகும் வரைக்கும்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி அடுக்கடுக்காக தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் ஸ்ரீரெட்டி புகார் கூறி வந்த நிலையில், நடிகர் சங்கச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் கண்டனம் தெரிவிக்கப் போக, “உங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் ரெட்டிகாரு” என்று கெத்து காட்டினார். நிலவரம் போகப்போக கலவரம் ஆகிக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்டவர்களோ “அமைதியோ அமைதி” காத்து வருகிறார்கள்.

“இந்த இடம் தான் திரில்லிங்கான இடம்” என்பது போல, இனி வருவது தான் ஹைலைட்டான சமாச்சாரமே.. “அரண்மனை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்இருந்த சமயத்தில், அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருவதாக சொல்லி இயக்குநர் சுந்தர்.சி என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சொன்னபடி வாய்ப்பு ஏதும் தரவில்லை” என்று இயகுநர் சுந்தர்.சி மீது விரல் நீட்டினார் ஸ்ரீரெட்டி.

இப்படி வரிசையாக ஒவ்வொரு திரை உலக பிரபலங்கள் மீதும் தைரியமாக ஸ்ரீரெட்டி புகார் வாசித்துக் கொண்டிருக்க, யாரிடம் இருந்துமே வலுவான எதிர்ப்பு வரவே இல்லை என்பதே இதில் வேடிக்கையான விசயம். சம்பந்தப்பட்டவர்களில் சுந்தர்.சி மட்டும் “வழக்கு போடுவேன்” என்றதோடு நிறுத்திக் கொண்டார். பொதுவாக எந்த சர்ச்சையாக இருந்தாலுமே, இரண்டு தரப்பினரும் பேசினால் தான் அது ஒரு முடிவுக்கே வரும். ஆனால் ஸ்ரீரெட்டி விவகாரத்திலோ, ஒரு முனையில் இருந்து அவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க மறுமுனையில் யாருமே மௌனம் கலைக்கவில்லை. இதனால் தான் இந்த பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது.

கடைசியாக பேசி இருக்கும் நடிகர் கார்த்தி கூட “அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் போலீசுக்கு போகட்டும். ஊடகங்கள் இதனை பெரிதாக்குகின்றன” என நழுவிக் கொண்டார்.

ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா? இல்லையா?.. பூகம்பமா? புஷ்வானமா? என்பது சம்பந்தப்பட்டவர்கள் வெளிச்சம். நாடு படும் பாட்டில், இதையெல்லாம் கவனிக்க மக்களுக்கு நேரமுமில்லை, நிம்மதியுமில்லை என்பதே உண்மை!