full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

எமன் – விமர்சனம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத  குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு மாரிமுத்துவின் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் தனது எதிரியான ஜெயக்குமாருடன் இணையும் மாரிமுத்து, விஜய் ஆண்டனியை கொல்லவதற்கான சதியில் உடன்படுகிறார். அதேநேரத்தில் தனது தம்பியை கொன்ற மாரிமுத்து, ஜெயக்குமாரை பழிவாங்க முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜன், விஜய் ஆண்டனியை பயன்படுத்துகிறார்.

பின்னர் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார்.  அதன்மூலம் தியாகராஜனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி அமைச்சரான அருள்ஜோதி, விஜய் ஆண்டனியையும் கொலை  செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் தோழியான மியா ஜார்ஜுக்கு அருள்ஜோதியின் மகன் தொல்லை  கொடுக்கிறார்.

இதிலிருந்து தப்பிக்க அரசியலில் நுழையும் விஜய் ஆண்டனி, அவருக்கு எதிரான தடைகளை தகர்த்து, சூழ்ச்சிகளை எவ்வாறு  முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

அரசியல்வாதியாக வரும் விஜய் ஆண்டனி அந்த வேடத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்தாலும் படத்தின் காதல்  காட்சிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவரது மற்ற காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் காதல் காட்சிகளில் அவரை  ரசிக்க முடியவில்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

மியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்பு இல்லை என்றாலும், மியா வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக மியா ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அரசியல்வாதியாக வரும் தியாகராஜன் அந்த இடத்திற்கு தேவையானவற்றை சிறப்பாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல  வேண்டும். அரசியல்வாதியின் அத்தனை அம்சங்களும் அவருக்கு சரியாக பொருந்தியிருக்கின்றன. சிறப்பான நடிப்பில்  மிரட்டியிருக்கிறார்.

அரசியலில் புதுமையை கொண்டுவர முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ஜுவா சங்கர் அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கியுள்ள காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் திரைக்கதைகளில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு வலுகொடுத்திருக்கின்றன. எனினும் பாடல்கள்  வேகத்தடையாக அமைந்தது திரைக்கதையில் மைனஸ். படத்தில் ஒரு சில முக்கிய காட்சிகள் நம்பகத்தன்மைக்கு ஏற்றதாக  உள்ளது. வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டிருக்கிறது.

படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய விஜய் ஆண்டனி பாடல்களை கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் விரும்பி பார்க்கும் படி  இல்லை என்றாலும், “என் மேல கைவைச்சா காலி” பாடலும் அதன் வரிகளும் ரசிகர்களால் கவரும்படி உள்ளது. அமைச்சராக வரும் அருள் ஜோதி ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். திருநெல்வேலி வட்டார பேச்சில் அவர்  கலக்கியிருக்கிறார். மேலும் சார்லி, சங்கிலி முருகன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாரிமுத்து ஆகியோரும் கதைக்கு ஏற்ப  தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவில் இயக்குனர் ஜீவா சங்கர் நிறைவைத் தந்துள்ளார். வீரசெந்தில் ராஜின் படத்தொகுப்பு பணிகளும் சிறப்பாக உள்ளது.

சினிமாவின் பார்வையில் `எமன்’ வென்றான்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *