full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி – அதர்வா உற்சாகம்!!

“இமைக்கா நொடிகள்” திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பினால் உற்சாகமடைந்திருக்கிறார் நடிகர் அதர்வா. ஒரு பெரிய வெற்றியை பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் இருந்த அதர்வாவிற்கு, பல சோதனைகளைக் கடந்து வெளியான இந்தப் படம் கைகொடுத்துக் காப்பாற்றி இருக்கிறது. இந்த வெற்றியைப் பற்றி அதர்வா இப்படி கூறுகிறார்,

“டிமாண்டி காலனி படத்திற்கு முன்பே அஜய் ஞானமுத்து இந்த கதையை எனக்கு சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் இந்த படத்தை செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு நடிகருக்கும் இந்த கதை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் உறுதியாக நம்பினேன். இப்போது படத்தை ஒரு ரசிகனாக இருந்து பார்க்கும்போது, வழக்கத்திற்கு மாறான ஒரு திருப்தி கிடைக்கிறது” என்றார்.

“இமைக்கா நொடிகள்” படத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் தயாரிப்பாளரை பற்றி அதர்வா கூறும்போது,

“கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயக்குமார் சார் மட்டும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. இந்த படத்தில் பல காட்சிகளுக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது. குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைவதற்கு நிறையவே செலவு செய்தார்” என்றார்.

படத்தின் நட்சத்திர பட்டாளம் பற்றிக் கூறும் போது,

“நயன்தாரா மேடத்தை விட யாரையும் அந்த கதாபாத்திரத்தில் எங்களால் யோசிக்க முடியவில்லை. சிபிஐ அதிகாரி அஞ்சலியாக அவரை பார்த்து நீங்கள் வியந்து போவீர்கள். இந்த படத்துக்காக அவருடைய அர்ப்பணிப்பு அபரிமிதமானது. தன் நீண்ட கூந்தலை கதாபாத்திரத்திற்காக வெட்டி விட்டு வந்தார். குறிப்பாக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் எந்த ஒரு நாயகியும் இந்த முடிவை எளிதாக எடுக்க மாட்டார்கள். அக்கா, தம்பியாக எங்கள் உறவு, சமகால உறவை பிரதிபலிக்கும். ராஷி கண்ணா காட்டிய நம்ப முடியாத ஈடுபாட்டை பாராட்டியே தீர வேண்டும். அவர் உதடசைவுகளையும், உச்சரிப்புகளையும் கூட கவனத்தில் வைத்திருந்தார். அனுராக் காஷ்யப் சார் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நம் எல்லோரையும் அவருடைய மிரட்டலான நடிப்பால் பயமுறுத்தினார்” என்றார்.

மேலும், அதர்வா கூறும்போது இமைக்கா நொடிகள் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் இனிய அனுபவம். அதேபோல படத்துக்கும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருக்கிறது என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன் சிவா மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆகியோரின் அசாத்தியமான உழைப்பு தான் இந்த படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் ஹாலிவுட் தரத்தை கொடுத்திருக்கிறது. தங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக, அனைத்து தளங்களிலும் வெளிப்படுத்தி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் அதர்வா நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.