full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

எழுமின் – விமர்சனம் 4/5

வி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம்குமார் மற்றும் ரிஷி நடித்துள்ளனர்.

கதைப்படி, கணவன் மனைவியாக வரும் விவேக் தேவயானிக்கு ஒரே மகன் அர்ஜுன். பாக்சிங் வீரரான இவர், பள்ளியில் படித்து வருகிறார். இவருடன் பள்ளி பயிலும் நண்பர்கள் ஐந்து பேர், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும், சிலம்பம், பாக்சிங், கராத்தே என ஒவ்வொரு தற்காப்பு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள்.

இவர்கள் ஆறு பேரும் அழகம் பெருமாள் நடத்தி வரும், சுந்தரம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஏழ்மையின் காரணமாக மாத தொகை கட்ட முடியாமல், ஐந்து மாணவர்களையும் அகாடமியில் இருந்து வெளியேற்றி விடுகிறார் அழகம்பெருமாள்.

நேஷ்னல் போட்டிக்கான செலக்‌ஷன் போட்டியில் அர்ஜுன் மட்டும் கலந்து கொள்கிறார். அப்போட்டியில் வெற்றி பெரும், அர்ஜூன், அந்த மகிழ்ச்சியில் அவருக்கு இதய அடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மரணமடைகிறார்.

இதனால், மனமுடைந்த விவேக், தேவயானி ஏழை மாணவ, மாணவியர்களுக்காக அர்ஜுன் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமியை துவங்குகிறார்கள். இதனால் விவேக்கிற்கும் அழகம்பெருமாளுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. அழகம்பெருமாளின் செல்வாக்கை எதிர்த்து விவேக் தனது மாணவர்களை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதே படத்தின் கதை..

ஒரு தந்தையாக தனது மகனை, மட்டுமல்லாது மாணவ, மாணவியர்களின் தற்காப்பு விளையாட்டுத் துறையில் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு ஊந்து சக்தியாக இருக்கிறார் விவேக். அவரின் வசனங்கள் அனைத்தும் மாணவச் செல்வங்களின் தெய்வவாக்காக பார்க்க வைக்கிறது.

பல இடங்களில் விவேக்கிற்கே உரித்தான மேனரிசத்தை கொண்டு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அழகு மாறாமல் புதுப் பொலிவுடன் மிளிர்கிறார் தேவயாணி. தனது குழந்தையை நல்வழிப்படுத்துவதற்காக ஒரு தாயாக தேவயாணி நடந்து கொள்ளும் அனைத்து காட்சிகளும் கைதட்டல் தான். தனது மகன் இறந்து விட்டதை அறிந்தவுடன் தேவயாணி அழும் காட்சிகள் நெஞ்சை பதம் பார்த்து விடுகிறது.

மாஸ்டர்ஸ் ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா மற்றும் தீபிகா அனைவரும் கதையில் நடிக்காமல் வாழ்ந்து காட்டியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அனைவரும் தனது அதிரடியை காட்டியுள்ளனர்.

அழகம் பெருமாள் மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் ப்ரேம் குமார் இருவரும் தனது கதாபாத்திரத்தை செதுக்கி சென்றுள்ளனர். படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அட்டு பட நாயகன் ரிஷி. ‘அட்டு’ படத்தில் ஹீரோவாக நடித்தாலும், ஒரு கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டதற்காகவே ‘ரிஷி’க்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். படத்தின் இரண்டாவது பாதியில் தோன்றும் இவருக்கு வில்லனுக்கு ஏற்ற ஒரு தோற்றம் தான். அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் இவர் அடி வாங்கும் காட்சிகள் மனதை படபட வைக்கிறது. ரியலாகவே அந்த மாணவர்களிடம் அடி, உதை வாங்கி கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார் ரிஷி.

தற்போது மாணவர்களின் தேவை, அவசியம் இந்த ‘தற்காப்பு’ கலை என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதையை கையில் எடுத்த இயக்குனர் வி பி விஜிக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்துக்கள். கதையின் ஒவ்வொரு காட்சியிலும், மாணவர்களின் விழிப்புணர்வு என்ற ஒரு ஒற்றை சாளரத்தை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். .

ஒளிப்பதிவு செய்திருக்கும் கோபி ஜெகதீஸ்வரன் காட்சிகளின் உயிருக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார். கணேஷ் சந்திரசேகரனின் இசையில் தனுஷ், சிங்கர் யோகி பாடிய இரு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னனி இசையில் ஸ்ரீ காந்த் தேவா கதையோடு பயணம் செல்லும் அளவிற்கு தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்திருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் மிரக்கல் மைக்கேல் ராஜ் தனது மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.

எழுமின் – குழந்தைகளின் தற்காப்பு கலைக்கான வீரமின்…