full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா.

பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார்.

காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி சிம்ஹா முயல்கிறார். அப்போது அங்கு வரும் ரஜினி, பாபி சிம்ஹாவை அதட்டி அனுப்பி வைக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த பாபி சிம்ஹா மற்றும் அவரது தந்தையாக வரும் ஆடுகளம் நரேன், ரஜினியை அடிக்க ஹாஸ்டலுக்குள் ஆட்களை அனுப்புகின்றனர்.

ஹாஸ்டலில் ரஜினியையும் சனத்தையும் வேறு ஒரு கும்பல் கொல்ல பார்க்கின்றனர். யார் அந்த கும்பல்..?? ரஜினியையும் சனத்தையும் ஏன் கொல்ல முயற்சிக்க வேண்டும்..?? என்று கதை மறுபக்கம் செல்லும் பயணம் தான் இந்த ‘பேட்ட’….

”ரஜினி – ஒரு நடிகர்” என்று சாதாரண வார்த்தைகளில் கூறிவிட முடியாது. தனது ஸ்டைலாலும் நடிப்பாலும் அனைவரையும் இப்படத்தில் கட்டி போடுகிறார். பல படங்களுக்கு முன் பார்த்த அதே குறும்பு, ஸ்டைல், ஆக்‌ஷன், எமோஷன், காதல் என அனைத்தையும் கண்முன்னே நிறுத்தி ரசிகர்கள் அனைவருக்கும் செம விருந்து படைத்திருக்கிறார்.

இளமையான தோற்றத்தில் வரும் ரஜினியை ரசிக்காமல் இருக்க முடியாது. ஆக்‌ஷன் காட்சிகளில் திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது. இன்னும் எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் என் கோட்டையை எவராலும் எட்ட முடியாது என்பதை பல முறை நிரூபித்தாலும், இம்முறையும் பலமாக அடித்து கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டலை காட்டியிருக்கிறார். பல இடங்களீல் நவாசுதீன் சித்திக்கின் கதாபாத்திரமும் அழுத்தமாக பேசி செல்கிறது. வில்லனுக்கான தனி ரகமாக காட்சியளிக்கிறார்.

சசிகுமார், பாபி சிம்ஹா, சனத் மூவரும் தனக்கேற்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ரஜினி – சிம்ரன் உடனான காதல் காட்சிகள் மனதை வருடுகிறது.மிக குறைவான காட்சிகளாக இருந்தாலும் தனக்கான ரோலை செய்து முடித்திருக்கிறார் த்ரிஷா.

ஆங்காங்கே திடீர் திடீர் என்று வரும் திருப்பங்கள் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்பதை ஒவ்வொரு ப்ரேமிலும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட், பின்னனி இசை படத்தின் கதையோடு இணைந்த பயணம்.

திருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து. ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டலை காட்டியிருக்கிறார்.

 பேட்ட – பொங்கல் விருந்து