full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

தொண்டன் – விமர்சனம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அப்பா வேல ராமமூர்த்தி, தங்கை அர்த்தனாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால், சமுத்திரக்கனியின் அம்மா இறந்து விட, கஞ்சா கருப்புடன் இணைந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, முதலுதவி செய்து வருகிறார். அதிலும் தனது ஆம்புலன்சில் ஏறியவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற கொள்கையுடனும் இருக்கிறார் சமுத்திரக்கனி.

அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தர்ராஜா என்ற இரு மகன்கள். இதில் நமோ நாராயணா தனக்கு எதிராக செயல்படும் ஒருவரை, தனது ஆட்களை ஏவி வெட்டி விடுகிறார். அவருக்கு முதலுதவி அளிக்கும் சமுத்திரக்கனி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறார். இதனால் சமுத்திரக்கனியை பழிவாங்க வேண்டும் என்று நமோ நாராயணா முயற்சி செய்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, சமுத்திரக்கனியை காதலிக்கும் சுனைனா, தனது காதலை சமுத்திரக்கனியுடன் தெரிவிக்க அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். இருவரும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மறுபுறத்தில் சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனா, தன்னைக் காதலிக்கும் விக்ராந்தின் காதலுக்கு மறுப்புத் தெரிவிக்கிறாள்.

இதனால், ஒரு கட்டத்தில் தவறான வழிக்குச் செல்லும் விக்ராந்துக்கு சில அறிவுரைகளைக் கூறி, முதலுதவி செய்யும் பணியில் ஈடுபடுத்திவிடுகிறார் சமுத்திரக்கனி. இதில் ஒரு உயிரைக் காப்பாற்றும் விக்ராந்துக்கு மகிழ்ச்சியுடன், மனநிறைவும் கிடைக்க அந்த பணியிலேயே நீடிக்க விரும்புகிறார்.

மேலும் அர்த்தனாவின் தோழிக்கு நமோ நாராயணா தம்பி சவுந்தர்ராஜன் காதல் தொல்லை கொடுக்க, ஒரு கட்டத்தில் மாணவிகள் அனைவரும் ஒன்றுகூடி சவுந்தர்ராஜனை தாக்கி விடுகின்றனர். இந்நிலையில் சவுந்தர்ராஜனுக்கு முதலுதவி கொடுக்கும் சமுத்திரக்கனி, மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, சவுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.

தனது தம்பியை, சமுத்திரக்கனி தான் கொன்றதாக நினைத்து அவரைப் பழிவாங்க துடிக்கும் நமோ நாராயணா சமுத்திரக்கனி வீட்டில் குண்டு வைக்க, சமுத்திரகனியின் குழந்தை இறந்துவிடுகிறது. இந்நிலையில், நமோ நாராயணாவை சமுத்திரக்கனி பழிவாங்கினாரா? நமோ நாராயணாவுக்கு அறிவுரை கூறி திருத்தினாரா? விக்ராந்த் – அர்த்தனா காதல் வெற்றி பெற்றதா? என்பது படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க துடிப்புடன் இருக்கும் சமுத்திரக்கனி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, சமூக பொறுப்பாளியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற படங்களைப் போல இல்லாமல், இந்த படத்தில் சுனைனாவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. அதற்கேற்றாற் போல் சுனைனாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சுனைனாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ராந்த் இப்படத்தில் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக வலம் வருகிறார். ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய கோபத்தில், காப்பாற்றிய மகிழ்ச்சியில் அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. படம் முழுக்க அர்த்தனா அழகு தேவதையாக வலம் வருகிறார். உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்படியாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நமோ நாராயணா ஒரு வில்லனுக்கு தேவையான கெத்துடன் கலக்கியிருக்கிறார். படம் முழுக்க சமுத்திரக்கனியுடனேயே பயணம் செய்யும் கஞ்சா கருப்பு கதைக்கு உறுதுணையாக காமெடி, செண்டிமென்ட் என அனைத்துப் பிரிவிலும் கலக்கியிருக்கிறார். சூரி, தம்பி ராமையா, நசாத் நகைச்சுவைக்கு அவர்களது பங்களிப்பைச் சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றபடி ஞானசம்பந்தம், வேல ராமமூர்த்தி, அனில் முரளி, சவுந்தர்ராஜன், படவா கோபி, திலீபன் தங்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர்.

இயக்குநராக சமுத்திரக்கனி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தற்போதைய முக்கிய பிரச்சனைகளான விவசாயம், அரசியல் நிலவரம், காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு, ஜாதி திணிப்பு என அனைத்து பிரிவிலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். மருத்துவம் எவ்வளவு முக்கியம், ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பதை தொண்டன் மூலம் உணர்த்தியிருக்கும் சமுத்திரக்கனியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். காமெடி, செண்டிமென்ட், கோபம், சீற்றம் அனைத்தையும் சரியான இடைவெளியில் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. ஒரு பொறுப்பான இயக்குநராக நின்றிருக்கிறார். படத்தில் வசனங்கள் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஏகாம்பரம், ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

சினிமாவின் பார்வையில் `தொண்டன்’ – சிறப்பானவன்