அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோகித் நதியின் குறுக்கே 9.15 கி.மீ. நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் ஆகும்.
அசாமின் தோலா- சதியா இடையே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இது அருணாசலப்பிரதேசத்தை அசாம் மாநிலத்துடன் இணைக்கிறது. பாலத்தின் ஒருபகுதியான சதியா என்ற இடம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 540 கி.மீ தொலைவிலும் மற்றொரு பகுதியான தோலா அருணாச்சலப்பிரதேச தலைநகரான இட்டாநகரில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
மும்பையின் பந்த்ரா -ஒர்லி இடையேயான கடல் பாலத்தைவிட 30 சதவீதம் நீளமானது. இந்த ஆற்றுப் பாலத்தின் மூலம் அருணாசலப்பிரதேசம், அசாம் இடையே பயண தூரம் 4 மணி நேரமாக குறைகிறது. சீனாவின் எல்லையையொட்டி இந்தப்பாலம் அமைந்துள்ளதால் இந்திய ராணுவத்தின் போக்கு வரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ராணுவத்தின் 60 டன் டாங்கி இந்தப்பாலத்தில் செல்லக் கூடிய வலிமையுடன் கட்டப்பட்டுள்ளது. ரூ 950 கோடி செலவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 2011-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
இந்தப்பாலத்தின் இரு புறமும் சாலை மார்க்கத்தில் சிறிய சாலைகளும் இணைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயணம் செய்யவும், பொருள் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது அசாம்- அருணாச்சலப்பிரதேசம் இடையே மக்கள் இந்த ஆற்றை படகு மூலமாகத்தான் கடந்து வருகிறார்கள். இனி பாலத்தின் வழியே சாலை மார்க்கத்தில் குறுகிய நேரத்தில் செல்லலாம்.
அசாம் சென்ற பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணிக்கு இந்த பாலத்தை திறந்து வைத்தார். முன்னதாக பாலத்தின் மீது காரில் சிறிது தூரம் பயணம் செய்தார். அதன்பிறகு காரில் இருந்து இறங்கி பாலத்தின் இடையே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நடந்து சென்று கீழே ஆற்றுப்பகுதியை எட்டிப்பார்த்தார்.
அவருடன் மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல்- மந்திரி சர்பானந்த சோனோவால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் தேமாஜி மாவட்டம் கோகாமுக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேளாண்மை ஆய்வு மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கவுகாத்தி திரும்பும் மோடி அங்கு சாருசா ஜாய் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.