தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு படங்கள் குறைந்தன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் மீண்டும் அதை குறைக்க முடியவில்லை. இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
அதன்பிறகு வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்துக்கு மாறி திரும்பினார். தற்போது மாதவன் ஜோடியாக ‘சைலன்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ சரித்திர படத்திலும் அனுஷ்கா கவரவ தோற்றத்தில் வருகிறார்.
இந்த படத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளன. இதில் அனுஷ்கா ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ஜான்சிராணி சம்பந்தமான சில காட்சிகள் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் இடம்பெறுகிறது என்றும், அந்த காட்சிகளில் அனுஷ்கா ஜான்சி ராணியாக வருகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.