full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்கு யுஏ சான்றிதழ்!

 

நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, “இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்தது குறித்து எங்கள் குழுவே மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. ‘தனுசு ராசி நேயர்களே’ படம் முழு நீள நகைச்சுவை மட்டுமின்றி, மெலிதான காதல் மற்றும் அனைவருக்குமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாகும்.

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை எழுத ஆரம்பித்ததுமே என் மனதில் தோன்றிய முதல் விஷயம், இது முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது படம் முழுவதும் பூர்த்தியடைந்த பிறகு பார்த்த படக்குழுவினரும் நெருங்கிய நண்பர்களும் தங்கள் முழு திருப்தியை தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் படம் வெகுவாக திருப்தியளித்ததாகத் தெரிவித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எனது குறிக்கோளை ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன் என்று திடமாக நம்புகிறேன்” என்றார்.

.ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, டேனியல் ஆன் போப், சார்லி, பாண்டியராஜன், மயில்சாமி, டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.கே.தர்மா ஏற்க, படத்தொகுப்பை குபேந்திரனும், கலை இயக்குநர் பொறுப்பை உமேஷ் ஜே.குமாரும் ஏற்றிருக்கின்றனர்.