full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

தந்தை உயிரோடு இல்லையே- காமெடி நடிகர் டி எஸ் கே வருத்தம்!

யார் இந்த பையன்..? ; தமன்னாவை ஆச்சர்யப்படுத்திய டிஎஸ்கே
காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!
பெட்ரோமாக்ஸ் வெற்றியைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் டிஎஸ்கேவுக்கு குவியும் வாய்ப்புகள்!
சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி வந்திருக்கிறார்..
பெட்ரோமாக்ஸைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்…  சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இரண்டு படங்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் டிஎஸ்கே இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஆதித்யா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.. இருந்தாலும் எனது நடிப்பு பசிக்கு அதில் சரியான தீனி கிடைக்கவில்லையே என்கிற எண்ணம் இருந்தது..
அதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்து என் நண்பன் நடிகர் அசாருடன் சேர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தேன்.. அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு சீசன்-7’-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது.
இதற்கு முன் தொலைக்காட்சியில் நடித்தது, சில படங்களில் நடித்தது என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு புதிதாக களம் இறங்கியது போல உத்வேகத்துடன் அதில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று சிம்புவின் கையால் பரிசு பெற்றோம்.
இந்த சமயத்தில்தான் பெட்ரோமாக்ஸ் படத்தில்  சினிமா ஆர்வமிக்க ஒரு இளைஞன் கேரக்டரில் நடிக்க சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தார்கள் அப்போது அந்த வாய்ப்பு எனது நண்பன் அசாருக்கு தேடி வந்தது..
ஆனால் அந்த சமயத்தில் அவர், “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். அதனால் நான்கு காமெடி நடிகர்களில் ஒருவராக நடிக்க முடியாத சூழலில் அவர் இருந்தார்.
அதனால் இயக்குநர் ரோஹின் வெங்கடேசனிடம் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக என்னை சிபாரிசு செய்தார்.. ஆனாலும் சில பல ஆடிசன்களுக்குப் பிறகே அந்த கேரக்டரில் என்னைத் தேர்வு செய்தார் ரோஹின் வெங்கடேசன்.
பல நகைச்சுவை நடிகர்கள் தங்களது மிமிக்கிரி திறமையால் பெரிய இடத்தை அடைந்துள்ளார்கள்.. எனக்கும் மிமிக்ரி திறமை இருந்தது என்பதால் அந்தவகையில் பெட்ரோமாக்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்..
காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது முதலில் நாங்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் கூட பெண்கள் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தேவதையாக தமன்னா வந்து இறங்கினார்..
பெரிய நடிகை என்கிற பந்தா எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக பழகினார்.. படப்பிடிப்பில் சூர்யா, விக்ரம், பாகுபலி காளகேயன் போல நான் மிமிக்ரி செய்து நடிக்கும் காமெடி காட்சிகள் மிமிக்கிரி வசனங்களை பார்த்துவிட்டு இயக்குநரிடம் யார் இந்த பையன் என்று விசாரித்துள்ளார் தமன்னா..
குறைந்த நாட்கள் தான் அவர் படப்பிடிப்பில் எங்களுடன் கலந்துகொண்டாலும் எந்த ஈகோவும் இல்லாமல் பழக ஆரம்பித்தவர் எனது வேண்டுகோளை ஏற்று, அவரது தீவிர ரசிகரான என் நண்பன் அசாரின் பிறந்தநாளுக்கு மொபைல் போனிலேயே  வாழ்த்துச் சொல்லி  கால் மணி நேரம் பேசினார். என் நண்பனுக்கு நான் கொடுத்ததிலேயே மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுவாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமல்ல பெட்ரோமாக்ஸ் பட ரிலீஸ் நேரத்தில் தமன்னா கலந்து கொண்ட ஒவ்வொரு பேட்டியிலும் படம் குறித்து கூறும்போது, தவறாமல் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு பாராட்டியபோதுதான் என்னுடைய நடிப்பால் அவர் மனதில் நானும் ஒரு இடம் பிடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியவந்தது.. இதைவிட பெரிய பாராட்டும் மகிழ்ச்சியும் ஒரு கலைஞனுக்கு என்ன இருக்க முடியும்?
படம் ரிலீசான சமயத்தில் என் தந்தைக்கு உடல் சரியில்லாமல் இருந்ததால், தியேட்டர்களில் ரசிகர்களிடம் எனக்கு கிடைத்த வரவேற்பை நேரில் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் அனைவருக்கும் எனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
இந்த படத்தை பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னை பாராட்டினார்கள். குறிப்பாக ஈகிள் ஐ நிறுவன தயாரிப்பாளர் சுதன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியதோடு தனது அடுத்தடுத்த படங்களில் கட்டாயம் எனக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு என வாக்குறுதியும் தந்துள்ளார்.
என்னுடைய  மிமிக்கிரி காட்சிகளை விட  எனக்குள் இருந்த நடிகன் எதார்த்தமாக வெளிப்பட்ட காட்சிகளை நிறைய பேர் பாராட்டியது சந்தோசத்தை கொடுத்தது. மேலும் ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் என் நடிப்பைப் பாராட்டியதுடன், இதுபோன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, நடிப்பில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
ஆனால் இந்தப் படத்தை பார்ப்பதற்கு, ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு எனது தந்தை தற்போது உயிருடன் இல்லை என்கிற வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது..
பெட்ரோமாக்ஸ் படம் பார்த்துவிட்டு  இன்னும் சில பெரிய படங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. அவை குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..  இதுதவிர ஹரிஷ் கல்யாணுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறேன்.
பெட்ரோமாக்ஸ் படத்தில் என்னுடைய கேரக்டருக்காக கிட்டத்தட்ட எட்டு கிலோ எடையை ஏற்றினேன்.. அதேசமயம் ஹீரோவாகவும் கதையின் நாயகனாகவும் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.. நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்பதுதான் தற்போது என்னுடைய எண்ணம்”  என்கிற தெளிவான திட்டமிடுதலுடன் தான் இருக்கிறார் டிஎஸ்கே..