full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

சாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி.

சாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி.

உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

இயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

கிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள  கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது. மூவாயிரம் சொற்களோடு ஆங்கில-கிளிக்கி-ஆங்கில ஒலி அகராதியும், தங்கள் பெயரைக் கிளிக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும், மொழியைப் பயில காணொளிகளும், கணினித்திரையில்  தட்டச்சுச் செய்ய மூன்று எழுத்துருக்களும்(fonts), சொற்களைக் கற்பதற்கான சொல் விளையாட்டுக்களும், பிற மொழிகளில் இருந்து கிளிக்கி மொழிக்கு ஒலிமாற்றும் கருவியும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.

உலக மொழிகளின் எழுத்து வடிவங்களையும் அவற்றைக் கற்பதில் உள்ள சிரமங்களையும் ஆராய்ந்து கிளிக்கி மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் எண்களை இரண்டு நிமிடத்தில் கற்க முடியும். ஒரு மணிநேரக் கற்றலின் மூலம் இந்த மொழியை எழுத மற்றும் படிக்கக் கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் கற்க 52 குறியீடுகளை ஒருவர் அறிய வேண்டும். கிளிக்கி மொழியை கற்க 22 குறியீடுகளை அறிந்தால் போதும்.  கிளிக்கி மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் சிறப்பு சொடுக்கொலிகளை(clicks) எப்படி உச்சரிக்க வேண்டும் எழுத வேண்டும் என்பது காணொளி மூலம் இந்தத் தளத்தில் கற்பிக்கப்படுகிறது.

கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறது. கிளிக்கி மொழியை பயில விரும்புவோர் www.kiliki.in என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம்.