ஜெமினி கணேசன் என்கிற ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்தாங்கோழி. இவரது பயத்தை போக்கவே சிறுவயதிலேயே ‘புரூஸ் லீ’ என்று பெயர் வைத்து விடுகிறார்கள். ஜி.வி.யின் நண்பன் பால சரவணன்.
ஜி.வி.பிரகாஷின் காதலி கீர்த்தியையும், பால சரவணன் காதலி என நான்கு பேரும் ஒன்றாக சுற்றி வருகிறார்கள். ஒருநாள் மெரினா பீச்சில் கிடைக்கும் கேமராவால், லோக்கல் தாதாவாக இருக்கும் ராமதாஸ் அமைச்சர் மன்சூர் அலிகானை கொலை செய்வதை ஜி.வி.பிரகாஷ் படம் பிடித்து விடுகிறார்.
இந்த புகைப்படத்தை வைத்து தாதா ராமதாசை போலீசில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் காதலியையும் பால சரவணனின் காதலியையும் ராமதாஸ் கடத்தி விடுகிறார்.
இறுதியில் ஜி.வி.பிரகாஷ் தனது காதலியை ராமதாஸிடம் இருந்து காப்பாற்றினாரா? ராமதாசை போலீஸிடம் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜி.வி.பிரகாஷ் வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் நடித்த முந்தைய படங்களின் பாதிப்பு இப்படத்திலும் அமைந்திருக்கிறது. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதை மனதில் வைத்து நடித்தால் சிறப்பாக இருக்கும். இருக்கும் ரசிகர்களை இவரே இதுபோன்ற படங்களில் நடித்து கெடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி கர்பந்தா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். நடிப்பு பரவாயில்லை என்றே சொல்லலாம். கிளாமரில் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
ராமதாஸ் பேசும் வசனங்கள் தான் நிறைய படங்களுக்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆனால், அவருக்கு வசனங்கள் கொடுக்காதது வருத்தம். இவரை வித்தியாசமான முறையில் பயன்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரிதளவு கைக்கொடுக்கவில்லை.
படத்திற்கு ஓரளவு பலம் என்று சொன்னால், பால சரவணனின் நடிப்பையும், மொட்டை ராஜேந்திரனின் நடிப்பையும் சொல்லலாம். ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் இருவரும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
டார்க் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். படம் ஆரம்பத்தில் பல படங்களில் இருந்து காப்பி அடித்து காட்சி படுத்தியிருக்கிறேன் என்று டைட்டில் கார்டு போடுகிறார். நல்ல படத்தில் இருந்து காப்பி அடித்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கதை, திரைக்கதை போன்ற விஷயங்களில் கூடுதல் மெனக்கெட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ’நான்தான் உங்கொப்பன் டா’ பாடலும் தீம் இசையும் ரசிக்கும்படி உள்ளன. மற்ற பாடல்கள் ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசை பரவாயில்லை.
சினிமாவின் பார்வையில் ‘புரூஸ் லீ’ கோழை.