full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

கொடுப்பவன் அல்ல, உரிமைகளைக் கேட்பவன் கர்ணன்!

 

 

 

‘கர்ணன்னு ஏன் படத்துக்குப் பேர் வெச்சீங்கன்னு எல்லோரும் என்னிடம் ஆர்வமா கேட்குறாங்க. படத்தில் தனுஷ் சார் பெயர் ‘கர்ணன்.’ மகாபாரதக் கர்ணன் எல்லாவற்றையும் தானம் கொடுக்கிற கர்ணனாக இருப்பார். ஆனால், இந்தக் கர்ணனிடம் கொடுப்பதற்கு எதுவுமே கிடையாது. இவன் எனக்குக் கொடு, எனக்குத் தா என்று தனக்கான விஷயங்களை, தனக்கான உரிமைகளைக் கேட்பவனாக இருப்பான்.’’ – ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் உரையாடலுக்கு அழைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இப்போது தனுஷுடன் கர்ணனாக வருகிறார்.

இதுதான் நான் சினிமாவாக எடுத்திருக்கவேண்டிய முதல் படம். ‘இந்தக் கதையை முதல் படமா பண்ணணும்னா ஒரு இயக்குநரா உன் மேல நடிகர், தயாரிப்பாளருக்கெல்லாம் நம்பிக்கை வரணும். அதனால இந்தப் படத்தை அடுத்த படமா பண்ணு’ன்னு இயக்குநர் ராம் சார் சொன்னார். அதனால்தான் இந்தக் கதையை அப்படியே வெச்சிட்டு ‘பரியேறும் பெருமாள்’ பண்ணினேன். ‘பரியேறும் பெருமாள்’ ரிலீஸாகி 10, 15 நாள் இருக்கும். தனுஷ் சார் போன் பண்ணிப் பேசினார். ஆனால், அப்போது அவர் படம் பார்க்கவில்லை. ‘உங்க படம் பத்தி நிறைய கேள்விப்பட்டேன். கதையிருந்தா சொல்லுங்க’ன்னு சொன்னார். அப்படித்தான் முதல்முறையா தனுஷ் சாரைப் பார்த்தேன். ஊர்ல மாடு மேய்ச்சிட்டு இருக்கும்போதிருந்தே சினிமா ஆசைதான். ஆனால், எந்த ஹீரோவுக்கு நாம கதை பண்றது, இவங்கல்லாம் நம்ம கதைக்குள்ள வருவாங்களான்னு அப்போ ஒரு கேள்வி இருக்கும். ஆனால், தனுஷ் சார் சினிமாவுக்குள் வந்தபிறகு என் கதைக்கான ஹீரோ, என் கதைக்கான முகம் கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. உதவி இயக்குநராக இருக்கும்போதே தனுஷ் சாரிடம் ‘கர்ணன்’ கதையைச் சொல்ல முயற்சி செய்தேன். அப்போது நடக்கவில்லை. இப்போது அவரோடு படம் பண்ணுவது மிகவும் சந்தோஷமா இருக்கு.’’

 

 

 

 

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றி, அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் என்றெல்லாம் தனுஷ் சார் இந்தக் கதையைக் கேட்கவில்லை. இவருக்குப் படம் பண்ணத்தெரியும்கிற நம்பிக்கையை மட்டும்தான் அவருக்குப் ‘பரியேறும் பெருமாள்’ கொடுத்தது. ‘கர்ணன்’ கதையை அவர் கேட்டு உள்வாங்கிக்கொண்ட விதம்தான் அவர் ஏன் சிறந்த நடிகரா இருக்கார் என எனக்குப் புரியவைத்தது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு என்னுடைய வொர்க்கிங் ஸ்டைலைப் பார்த்து அவருக்கு இன்னும் என்மேல் நம்பிக்கை வந்தது. சேர்ந்து டிராவல் பண்ணியிருக்கோம்.’’

`இது முழுக்க முழுக்க எளிய மக்களின் வாழ்வியலைப் பேசும் படமாக இருக்கும். ஒரு கிராமம், அங்கிருக்கும் எளிய மக்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் படம்.”

 

 

 

`எளிய மக்கள் தொடர்ந்து இந்தச் சமூகத்தில் இயங்குவதற்கான பிரச்னைதான் இந்தப் படம். தினமும் பல தேவைகளை மக்கள் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். யாருடைய குரலுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கிறது, யார் கேட்டால் சீக்கிரம் கிடைக்கிறது, யாருடைய குரல் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது, அப்படிக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான காரணம் என்ன… இதெல்லாம் சேர்ந்ததுதான் ‘கர்ணன்’ படம்.’’

`தனுஷ் சாரின் மிகப்பெரியபலம் என்னவென்றால் முழுக்கதையையும் மனதுக்குள் வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு ஷாட்டிலும் நிற்பார். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் நிஜமான அளவு, அந்தக் கதாபாத்திரத்தின் நேர்மை இம்மிகூடக் குறையாமல் நடிக்ககூடிய நடிகர் அவர். எனக்கு இந்தப் படம் மிகப்பெரிய கற்றல். ஒரு நடிகருக்கும் இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருந்தால் காட்சிகள் எப்படி வரும் என்பதை இந்தப் படத்தில் நான் கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தை எடுப்பதற்கு தத்துவார்த்த ரீதியாகவே எனக்குப் பெரிய உதவி தேவைப்பட்டது. அதற்கு மிகப்பெரிய பலமாக தனுஷ் சார் இருந்தார். அவரோடு பேசிப்பேசி நிறைய விஷயங்கள் செய்திருக்கிறேன்.’’

‘`மலையாள நடிகர் லால், நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக ‘ஜூன்’ எனும் மலையாளப் படத்தில் நடித்த ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். லட்சுமி குறும்படத்தில் நடித்த லட்சுமிபிரியா, ‘96’ படத்தில் நடித்த கெளரி என, தொழில்முறை நடிகர்கள் 10 பேர்தான் படத்தில் இருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் கிராமத்து மக்கள்தான்.’’
`கொடியன்குளம் கலவரம் பற்றிய படமோ, தென் மாவட்டக் கலவரங்கள் பற்றிய படமோ நிச்சயமாக இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும். இது ஒரு புனைவு. இதற்குள் சில உண்மைச் சம்பவங்களும் இருக்கும். உண்மையை உண்மையாக எடுக்க சினிமா இயக்குநர்கள் தேவையில்லை. உண்மையைத் தெரிந்துகொள்ளச் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் எனப் பத்திரிகைகள் இருக்கின்றன. பல கதைகள் கேட்கிறோம், பல கதைகள் படிக்கிறோம். அதைக்கொண்டு ஒரு புனைவை உருவாக்கிப் படமாக எடுக்கிறோம். அவ்வளவுதான். அப்படிப்பட்ட படம்தான் ‘கர்ணன்.’
உங்க படம் எதைப் பற்றிப் பேசப்போகுது?’ என ஒரு படைப்பாளியிடம் கேட்பதே அநீதி என்றுதான் நினைக்கிறேன். நான் எல்லாத்தரப்பு மக்களுக்குமான படம் எடுக்கிறேன். அதைப் பார்க்கவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அதைப் புரிந்துகொள்வார்கள். ஒருவருக்கு ஒரு காட்சி பிடித்திருக்கும்; இன்னொருவருக்கு அது பிடித்திருக்காது. அவ்வளவுதான். எங்கேயோ மாடு மேய்த்துக்கொண்டிருந்த நான் என்னுடைய வாழ்க்கையை, இது என்னுடைய கதை என்று ‘பரியேறும் பெருமாள்’ என்கிற பெயரில் படமாக எடுக்கிறேன். அது என் கதை என நினைக்கிறேன். ஆனால், படம் வந்த பிறகு அது பல கோடிப்பேரின் கதை என்பது புரிந்தது. நான் அனுபவித்த துயரத்தை, என்னுடைய வலியை உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் இன்னொரு மனிதரும் உணர்ந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் சினிமாவை ஜஸ்ட் லைக் தட் அணுகக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சியை எனக்குக் கொடுத்தது.

 

 

 

சமீபத்தில் நான் பிரான்ஸுக்குப் போயிருந்தபோது அங்கே கறுப்பினத்தவர்கள் ‘இது எங்களின் கதை, மொழியை மட்டும் மாற்றி இந்தக் கதையை அப்படியே இங்கேயும் எடுக்கலாம்’ என்றார்கள். உலகம் முழுக்க இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. எனக்கு இந்தச் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது. நான் அடுத்த தலைமுறைக்காகத்தான் படம் எடுக்கிறேன். அவர்களைத் தவறான வழியில் கொண்டுசெல்லக்கூடிய படங்களை எடுத்துவிடக் கூடாது என்கிற தெளிவு மிகவும் அதிகமாக இருக்கிறது.’’

 ஏன் கையில் வாள் வைத்திருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள நீங்கள் படம் வரும் வரை காத்திருக்க வேண்டும். வாள் என்பது வெட்டுவதற்காக மட்டும்தான் இருக்கிறதா என்ன? ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பரியனின் கேரக்டர் என்பது வேறு. பரியன் பிறந்த ஊர், அவன் பெற்றோர், அவன் வளர்ந்த சூழல், அவனுடைய குணாதிசயங்கள், அவனுடைய கோபம், அவனுடைய அமைதி என எல்லாமே வேறு. இந்த குணாதிசயங்கள் கொண்ட ஒருவனுக்கு ஒரு பிரச்னை வரும்போது அவன் எப்படி அதைக் கையாள்கிறான் என்பதுதான் ‘பரியேறும் பெருமாள்.’ ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் குணாதிசயங்கள் வேறு. இதில் ஹீரோவுக்காக எந்த மாற்றங்களையும் கதையில் செய்யவில்லை. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பரியன் திருப்பி அடிப்பதற்கான சூழல் இருக்கும். ஆனால் அவன் அதைச் செய்யமாட்டான். எனக்கு வன்முறைமேல் துளி விருப்பமும் கிடையாது. இந்தப் படத்தில் கர்ணனின் தேவையென்ன, அவனுடைய கோபம் என்ன என்பது படம்பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்.’’
`நான் என் கருத்துகளை என் படத்தில் பதிவுசெய்கிறேன். என் கலையின் வழியாகச் சொல்கிறேன். ‘நீங்க ஒரு படம் எடுத்தீங்கள்ல இப்ப பேசுங்க, இங்கவந்து பேசுங்க’ என்று கேட்பவர்களிடம் நான் என்ன சொல்வது? ஒரு டாக்டர் ஆபரேஷன் அறையில்தான் ஆபரேஷன் செய்வார். அவரைத் தெருவில் வைத்து ஆபரேஷன் செய்யச் சொன்னால் எப்படி? கலைத்திறனை முக்கியமான ஆயுதமாக நம்புகிறேன். அதன் வழியாக மட்டுமே மக்களுடன் பேச விரும்புறேன்.’’
`எல்லா ஜானர்களிலும் படம் எடுக்க விரும்புகிறேன். எல்லாமே சமூகம் சார்ந்ததுதான். எந்த ஜானரில் படம் எடுத்தாலும் சமூகப் பொறுப்புடன்தான் அதைச் செய்வேன். நிச்சயம் என்னிடமிருந்து பலதரப்பட்ட படங்கள் வரும்.