full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

பொன்மகள் வந்தாள்

 

 

நடிகர் நடிகர் இல்லை
நடிகை ஜோதிகா
இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக்
இசை கோவிந்த் வசந்தா
ஓளிப்பதிவு ராம்ஜி
2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா.
சைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் ஜோதிகாவுக்கு பல இன்னல்களும் பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார்? அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஜோதிகா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், தந்தை பாக்யராஜுடன் பேசும்போது கேசில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும், கோர்ட்டில் வாதாடும்போது கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களின் வலியை நடிப்பால் உணர்த்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகா சோர்ந்து போகும் போது உற்சாகம் கொடுப்பவராக நடிப்பில் பளிச்சிடுகிறார். சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார் தியாகராஜன். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
தனக்கே உரிய நக்கல் நையாண்டி நடிப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ஜோதிகாவிற்கு பிறகு அதிக அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுப்பு பஞ்சு நடந்ததை சொல்லும்போது அந்த இடத்தில் பார்த்திபன் தன்னைக் கற்பனை பண்ணி பார்க்கும் காட்சி சிறப்பு. எதிர்பார்க்காத இடைவேளையும், யூகிக்க முடியாத இறுதி காட்சியும் ரசிக்க வைக்கிறது.
பெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக்.
மற்றவர்களுக்கு நடந்ததை செய்தியாக பார்க்காமல், தனக்கு நடந்ததாக உணர்ந்தால் அவர்களின் வலியும் வேதனையும் புரியும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ ஏஞ்சல்