full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம் – சூர்யா அறிக்கை

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

இயக்குனர் ‘சுதா கொங்கரா’ அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பில் உருவாகும் திரைப்படம் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை.

எனது 2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதுவரை எட்டு படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.