full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

புதிய சிக்கலில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் ஒரு பாடலில், சாதி பிரச்சினையை தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், சூரரைப்போற்று படத்தில் வரும் “மண் உருண்ட மேல… மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிகாரனுக்கு இரண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் வருகிறது. அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில், இதுபோன்ற பாடல் வரிகள் தவறான எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தும்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கலாம். அதனால் 2022-ம் ஆண்டு வரை சூரரைப்போற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், “இதுகுறித்து கடந்த மார்ச் 20-ந்தேதி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தபால் மூலம் புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெய்சிங், ‘புகார் கொடுத்து 5 மாதங்கள் கடந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் எஸ்.கார்த்திகேயன், ‘தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் வந்து சேரவில்லை’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “மனுதாரர் மீண்டும் புகார் மனுவை போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.