full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்!

கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சென்னை ராயபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இதில் மக்கள் பணியில் தன்னை அதிகமாய் இணைத்துக் கொண்டு களத்தில் நின்ற அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.

அவருக்கு நினைவுப் பரிசாக வீரவாள் ஒன்றும் கொடுக்கப்பட்டது.வழக்கமாக வாளை பரிசாக பெற்றுக் கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் அதை கையில் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? வாளை கையில் வாங்கியவுடன் அதை வேகமாக சுழற்றி சுழற்றி தன் வித்தையை காட்டத் துவங்கிவிட்டார் அமைச்சர்.

பார்த்தவர்கள் அனைவரும் பிரமிப்பில் உறைந்து போனார்கள். இவருக்கு எப்படி வாள் வீசத் தெரியும் என்று முணுமுணுத்துக் கொண்டார்கள். இப்போது இவர் அமைச்சராக இருக்கிறார் இதற்கு முன்பு என்னவாக இருந்தார் என்று சிலர் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று ஒருவர் கேட்க, “ஆமாப்பா கிரிக்கெட் ஆடுறாரு,கேரம்போர்டு விளையாடுறாரு,பசங்களோட ஃபுட்பால் கலக்குறாரு, கச்சேரியில் பாட்டு பாடுறாரு, திடீர்னு பாக்ஸிங் பண்றாரு,ஆட்டோ ஓட்டுறாரு,திடீர்னு பார்த்தா அண்டாவுல பிரியாணி கொண்டு வந்து மக்களுக்கு கொடுக்குறாரு,மீன் பிடிக்குறாரு, வேட்டிய மடிச்சு கட்டிட்டு மரம் வெட்டுறாரு,எல்லாத்தையும் பண்றாரு…இப்போ அமைச்சரா இருக்குற இவரு இதுக்கு முன்னால என்னவா இருந்திருப்பாரு” என்ற கேள்விகளும் பதில்களும் கூட்டத்தில் பலரிடம் இருந்ததை பார்க்க முடிந்தது.

அதற்கு மற்றொருவர் சொன்ன பதில், “சின்ன வயசுலயிருந்தே அமைச்சரை நான் பார்க்றேன், ஸ்கூல் படிக்கும்போதும் சரி காலேஜ் படிக்கும்போதும் சரி விளையாட்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும், எல்லா ஸ்போர்ட்ஸ்லயும் தீவிரமா இறங்கி பல பரிசு வாங்கியிருக்காரு, அந்த அனுபவம் அவருக்கு இப்போவும் கை கொடுக்குது” என்று விளக்கம் சொன்னார்.

மொத்தத்தில் மக்களோடு மக்களாக பயணிக்கும் மக்கள் நலன் விரும்பும் அமைச்சராக தொகுதியைத் தாண்டி, அனைவரும் விரும்பும் தகுதி உள்ள மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார் என்பது தான் பலரது குரலாய் ஓங்கி ஒலிக்கிறது.