full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

நிஜத்தில் கர்ணனாக மாரி செல்வராஜ் – கர்ணன் விமர்சனம்!

 

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாளுக்கு பிறகு மற்றொரு முக்கியமான தேவையான படமாக கர்ணன் திகழ்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படத்திலும் தான் சொல்லவரும் கருத்தை தெள்ளத்தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் படியாக அருமையாக உருவாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவின் தூணாக இருக்கும் திரு. கலைப்புலி தாணு அவர்கள் மாரி செல்வராஜுக்கும் மிகப்பெரிய பலமாக உறுதுணையாக இருந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது. அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கிய செய்தியோடு இப்படத்தை பார்க்கையில் நடிகர் தனுஷ் அதற்க்கு சிறிதும் சளச்சவர் இல்லை என்றே தோன்றியது.

காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே மற்ற சமூகத்தினரால் மற்றும் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதை இப்படம் தெளிவாக காண்பித்துள்ளது. அம்மக்களுக்கு நேரும் அநியாயத்தை அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை அரசாங்கமும், மேல்தட்டு சமூகமும் பறிக்கும் பொழுது அவர்களுக்குள் எழும் கோபத்தின் மொத்த உருவமாக கர்ணன் வெளிப்படுகிறான்.

1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்த பொடியன்குளம் மக்களுக்கு  கர்ணன், ஏமராஜா, துரியோதனன், அபிமன்யு போன்ற பெயர்கள், வில்லனாக வரும் காவல்துறை அதிகாரிக்கு கண்ணாபிரான் என்ற பெயர் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நாயகனாக திரைப்படத்தில் கர்ணன் திகழ்கிறான், நிஜத்தில் மாரி செல்வராஜ். இந்த படம் உலகம் முழுதும் சென்றடையும். அடையவேண்டும். பாலிவுட்டை மட்டுமே இந்திய சினிமா என நம்ப படவைக்கும் பின்பம் உடைந்து தென்இந்திய சினிமாவும் இந்திய சினிமாவின் வேர்களில் ஒன்று, அதன் மக்கள் பட்ட மற்றும் படும் அவலங்களை  உலக மக்கள் அறிய பல சர்வதேச விருதுகள் பெற வேண்டும்.