சௌந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விடியல் ராஜு தயாரிக்க, புதுமுக இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.இந்தப் படத்தில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத் தொகுப்பு தியாகு.
கொடைக்கானலுக்கு டாக்டர் தம்பதியும், அவர்களது மகள் 12 வயது சிறுமியும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள். வந்த இடத்தில், சிறுமியை காணவில்லை. தம்பதி பதறிப்போய், காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள்.அவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜூக்கு எதிர் காட்டேஜில் தங்கியிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவரை காணவில்லை. ஆகவே அந்த இளைஞன்தான், தங்கள் மகளை கடத்தி இருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறார்கள்.இதற்கிடையில் உள்ளூர் ரவுடி ஒருவர் மீதும் சந்தேகம் முளைக்கிறது. தவிர, செக்போஸ்ட் காவலர் பேச்சும். பார்வையும் சரியில்லை.ஆக, இந்த மூன்று தரப்பில் யார் குற்றவாளி என்கிற கோணத்தில் படம் நகர்கிறது.
இறுதியில் உண்மைக் குற்றவாளி யார் என தெரியும் போது, கடும் அதிர்ச்சி. அதோடு போதை கூடாது என்கிற செய்தியையும், திரைக்கதை சுவாரஸ்யம் மீறாமல் சொல்லியிருக்கிறார்கள்.
12 வயது பெண்ணின் தாயாக வரும் அஞ்சலி, அந்த சிறுமி, இளைஞர்கள் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜான் விஜய் வழக்கம்போல, வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அடிக்கடி, ‘மூர்த்தி’ என கத்துவதையும், கேரட் சாப்பிட்டபடியே இருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.செக்போஸ்ட் காவலராக வருபவர் மிகச் சிறந்த நடிப்பு. அவரது பார்வையும், உடல் மொழியும் மிரட்டுகின்றன.க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ப, அதிரவைக்கும் இசை. ஜோகனுக்கு பாராட்டுகள். அதே போல இயல்பான ஒளிப்பதிவு,கவர்கிறது.மிகக்குறைந்த பட்ஜெட். ஆனாலும் திரைக்கதையின் சிறப்பான ஓட்டம் ஈர்த்துவிடுகிறது.
தவிர, க்ரைம் த்ரில்லர் படங்களில் பல லாஜிக் மீறல்கள் இருக்கும். அப்டியான மீறல்கள் இல்லை என்பது சிறப்பு.அதோடு யாரும் கணிக்க முடியாத முடிவு. மேலும், சமூகத்துக்கு அவசியமான செய்தியை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.