நாயகன் உமாபதி மதுரைப்பகுதியில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறார். நாயகி தாமனியைச் சந்திக்கும் உமாபதிக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. இந்நிலையில், மதுரைக்குப் புதிதாக வரும் வருவாய்த்துறை பெண் அதிகாரி எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்கிறார். மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பவர்களை அழைத்து எச்சரிக்கிறார். ஆனால் அந்த அதிகாரி செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிகிறது. ஒரு கொலை தொடர்பான வீடியோவை தனக்கே தெரியாமல் தாமினி வெளியிட, அவரையும் காதலன் உமாபதியையும் பழிவாங்க நினைக்கிறார் அந்த அதிகாரி.
இறுதியில் அதிகாரி உமாபதியை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.நிஜத்தில் தம்பி ராமையாவின் மகனான உமாபதி படத்திலும் அவரது மகனாகவே வருகிறார். நல்ல உயரம், சண்டைக்காட்சியில் இயல்பாக நடிப்பது என்று கதாநாயகனுக்கான எல்லாம் இருந்தும் அவருக்கு நல்ல கதை கிடைக்காதது சிக்கல்தான். பாலசரவணனுடன் சேர்ந்து உமாபதி காட்டும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
வித்யூலேகா, தேவ தர்ஷினி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். சம்ஸ்கிருதி பொம்மையாக வந்து உமாபதியைக் காதலிக்கிறார். படத்தில் அவருக்கு அதிக வாய்ப்பில்லை. பெண் அதிகாரியான வரும் வினிதாலால்தான் படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார். இன்னொரு நீலாம்பரியாக விரைப்பு காட்டுகிறார். அவர் வரும் காட்சிகள் நல்ல பொழுது போக்கு.திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருப்பதால் படத்தின் பல காட்சிகள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் செல்கிறது. படத்தை எடுத்த விதத்திலும் இயக்குநர் மாணிக்க வித்யா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மோசஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். வெங்கட்டின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.