சென்னையில் கெமிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக பல கம்பெனிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால் (இர்பான் அகமது). இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் வேலை கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். இதே நேரம் அபு பக்கர் என்னும் தீவிரவாதியை தேசிய புலனாய்வு நிறுவனம் தேடி வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் செல்போன் விமான நிலையத்தில் காணாமல் போகிறது. இந்த செல்போனை வைத்து விமான நிலையம் அருகே வெடிகுண்டு வெடிக்கிறது. இதையடுத்து தேசிய புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் அபு பக்கர், விஷ்ணு விஷால்தான் என்று முடிவு செய்து கைது செய்யப்படுகிறார்.இறுதியில் போலீஸ் பிடியில் இருந்து விஷ்ணு விஷால் தப்பித்தாரா? உண்மையான தீவிரவாதி அபு பக்கர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் இஸ்லாமிய இளைஞராக நடித்து அசத்தி இருக்கிறார். வழக்கமான விஷ்ணு விஷாலாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்திருக்கிறார். சாது, பாசம், ஆக்ஷன் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக, மதத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது பரிதவிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.விஷ்ணு விஷாலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் கௌதம் மேனன். என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு நிறுவனம்) அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். தனக்கே உரிய பாணியில் ஸ்டைலிஷாக பேசி அசத்தி இருக்கிறார். என்.ஐ.ஏ.வின் மற்றொரு அதிகாரிகளாக வரும் ரைசா வில்சன், ரெபா மோனிகாஜான் ஆகியோர் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார்கள். வக்கீலாக வரும் மஞ்சிமா மோகன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
துப்பறியும் ஆக்ஷன் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விஷ்ணு விஷாலை கதாபாத்திரத்திற்காக திறம்பட தயார் படுத்தியிருக்கிறார். முஸ்லிம் மதத்தினரை சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். குறிப்பாக இந்தியன் முஸ்லிம் நாட்டு நலனுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்பதை சொல்லியதற்கு பெரிய பாராட்டுகள். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதையால் ரசிகர்களை கட்டிவைத்திருக்கிறார் இயக்குனர்.அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இவருடைய பின்னணி இசை படத்திற்கு பலம். அதுபோல், ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் கடுமையாக உழைத்திருக்கிறார்