full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

சத்ரியன் – விமர்சனம்

திருச்சியில் தாதாவாக இருக்கும் சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சி மாநகரத்தையே ஆட்டிப்படைக்கிறார். தாதாவாக சரத் லோகிதஸ்வா இருந்தாலும், மகன் சவுந்தரராஜாவுக்கு, மகள் மஞ்சிமா மோகனுக்கும் அன்பான தந்தையாக இருக்கிறார். இதில் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.

ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். இவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு இருக்கிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர்.

இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக விக்ரம் பிரவை நியமிக்கிறார் விஜய் முருகன். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை அடித்து நொறுக்கிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

ஒரு வழியாக தனது காதல் வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழ்க்கை வாழலாம் என விக்ரம் பிரபுக்கு அறிவுரை கூறி காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இறுதியில் இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு விடுபட்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு ஆக்‌ஷன், ஆக்ரோஷம், அமைதி என சிறப்பாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டலான நடிப்பையும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மஞ்சிமா மோகன் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருச்சி பெண்ணாகவே வாழ்ந்து, மனதை கவர்ந்திருக்கிறார். சுடிதார், புடவையில் அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

தாதாவாக வரும் சரத் லோகிதஸ்வா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம் போல் கொடுத்த கதாபாத்திரத்தை அவருக்கே உரிய பாணியில் கலக்கியிருக்கிறார் அருள்தாஸ். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார் போஸ்டர் நந்தகுமார். விஜய் முருகனின் நடிப்பு படத்திற்கு பலம்.

சவுந்தரராஜா, கவின் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பயங்கொள்ளியாக நடித்திருக்கும் சவுந்தரராஜாவின் நடிப்பு அபாரம். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள், விக்ரம் பிரபுவின் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை மிரட்டுகிறது. “பாறை மேல தூறல் போல” பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.

சினிமாவின் பார்வையில் `சத்ரியன்’ தைரியமானவன்.