நாயகன் அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் நாசர் நடத்தி வரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், பண பிரச்சனையில் சிக்கும் அசோக் செல்வனுக்கு நாயகி பிரியா பவானி சங்கர் உதவ முன் வருகிறார். இந்த உதவிக்கு பலனாக பாய்ஸ் ஹாஸ்டலுக்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறார்.
அசோக் செல்வனும் பணத்திற்கு ஆசைப்பட்டு, பிரியா பவானி சங்கரை யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் பாய்ஸ் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் வெளியேறினாரா? பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலுக்குள் செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், எப்பவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவார். ஆனால், இம்முறை அவரது தேர்வு தவறாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரது நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். சதீஷ், நாசர், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.
காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஆனால், படத்தில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், சிரிக்கதான் முடியவில்லை. திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. அனுபவ நடிகர்களை வைத்து வேலை வாங்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.
போபோ சாஷி இசையில் பாடல்கள் அதிகம் கவனம் பெறவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.