ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு ஜனரஞ்சகமான, குடும்பத்துடன் ரசிக்கும் படியான ஒரு திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்படுகிறது இந்த “கதிர்” திரைப்படத்தில்
படத்தின் கதாநாயகன் வெங்கடேஷ் கல்லூரியில் படித்துவரும் போது நாயகி பவ்யா ட்ரிகாவை சந்திக்கிறார். இவர்களுக்குள் ஏற்படும் காதல், ஒருகட்டத்தில் முறிந்துவிடுகிறது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு தன்னுடைய சொந்த கிராமத்தில் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றி வருகிறார் வெங்கடேஷ்.
தந்தையால் கண்டிக்கப்படும் வெங்கடேஷ், சென்னை நோக்கி வேலை தேடி வருகிறார். சென்னையில் இருக்கும் தன்னுடைய கல்லூரி நண்பன் வசிக்கும் வாடகை வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் நாயகன் வெங்கடேஷ். நேர்காணலுக்கு செல்லும் வெங்கடேஷுக்கு எங்கும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிறார். விரக்தியில் இருக்கும் வெங்கடேஷ், தான் தங்கி இருக்கும் வீட்டின் பெண் உரிமையாளர் ரஜினி சாண்டியுடன் நட்பாக பழகுகிறார்.
வேலை தேடும் வெங்கடேஷுக்கு வேலை கிடைக்கிறதா, ரஜினி சாண்டியுடன் ஏற்படும் நட்பு வெங்கடேஷுக்கு உறுதுணையாக இருக்கிறதா அல்லது அவருடைய வாழ்க்கையை புரட்டி போடுகிறதா என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தின் திரைக்கதை, கல்லூரி வாழ்க்கை, காதல், புரட்சி, குடும்பம் என அனைத்தையும் தொட்டு அழகாக கருத்து சொல்கிறது இத்திரைப்படம். படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெங்கடேஷ், வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ரஜினி சாண்டி மற்றும் நாயகனின் நண்பர்கள் என பலர் அனைவரும் இதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தங்களுடைய நடிப்பில் குறை ஏதுமின்றி அற்புதமாக நடித்துள்ளனர். படத்தின் இரண்டாவது பாதிக்கு மேல் சிறப்பு காட்சியில் தோன்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப், ஒரு புரட்சியாளனாக தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார். நாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பாவ்யா ட்ரிகா தன்னுடைய அழகிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளார். பாவ்யா ட்ரிகா தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. ரஜினி சாண்டியின் நடிப்பு, குறிப்பாக அவருக்கு கொடுக்கப்பட்ட பின்னணி குரல் பார்வையாளர்களை ஈர்க்க வைக்கிறது.
கார்த்திக் மேத்தா மற்றும் உமா தேவியின் பாடல் வரிகளில் பிரஷாந்த் பிள்ளையின் இசை மற்றும் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது. தினேஷ் பழனிவேலின் கதை, திரைக்கதை, வசனத்திலும், அவருடைய இயக்கத்திலும் உருவாகியுள்ள இப்படம் பார்வையாளர்களுக்கு கருத்து சொல்லுவது மட்டுமின்றி, பார்வையாளர்கள் ரசித்து பார்க்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் எங்கும் ஆபாச காட்சிகளோ, அல்லது இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை என்பது பாராட்டுதலுக்குரியது.
‘கதிர்’ திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.