ஷர்வானந்த், சதிஷ், ரமேஷ் திலக், அமலா அகினேனி, ரிது வர்மா நடிப்பில், ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவான படம் “கணம்”. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர்.
கணம் என்றால் தருணம் என்று சொல்லலாம். பெயருகேற்றவாறு தான் கதையும். முற்காலத்தில் அறியாமையால் செய்த தவறுகள், அலட்சியத்தால் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் அதனால் பிற்காலத்தில் ஏற்படும் இழப்புகள், இது அனைவருக்குமே நடந்திருக்கும். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சரி செய்து விடலாம் என்று அதை நினைத்து நிச்சயம் வருந்தியிருப்போம். ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
இது தான் ஷரவானந்த், சதிஷ் மற்றும் ரமேஷ் திலக் யோசிக்கிறார்கள். அவர்கள் மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளையும், காலத்தை வீணடித்து விட்டு இளம் வயதில் வருந்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விஞ்ஞானியான நாசர் டைம் மிஷின் குடுக்கிறார். அதன் துணை கொண்டு கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் சரி செய்து வாருங்கள் என்கிறார். அதை கேட்ட ஷர்வானந்த், சதிஷ் மற்றும் ரமேஷ் திலக் அவர்களின் வாழ்க்கையில் பெரிதாக இழந்த விஷயங்களை மாற்றிமைக்க காலம் கடந்து பயணிக்கிறார்கள். அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்ததா? எந்த காரணத்திற்காக அவர்கள் பயணிக்கிறார்கள்? என்பது மீதிக்கதை…
ஷரவானந்த் எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு கணம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார். அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் மகனாக நடித்திருக்கிறார். அம்மாவை மீண்டும் பார்க்கும் தருணங்களில் நிதானமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா தன்னை உணரும் போது யதார்த்த நடிப்பில் உணர்வுகளை அள்ளிச் செல்கிறார்.
சதிஷ் கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் விரக்தி அடையும் போது, நம் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார். ரமேஷ் திலக் சிறு வயதில் படிக்காமல் விட்டதால் தான் இன்று வீடு புரோக்கராக இருக்கிறோம் என்று வருந்தி அதை சரி செய்ய அவர் எடுக்கும் முயற்சியில் பொறுப்புடன் நடித்திருக்கிறார்.
30 வருடங்களுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை துருத்துருவென்று நடித்த அமலாவைத் தான் பார்த்திருப்போம். ஆனால், மென்மையான அம்மாவாக ஆழமான பாசத்தை வெளிப்படுத்தி அசர வைக்கிறார். என் மகன் இப்படி தான் என்று அவர் வசனம் பேசும்போது பார்வையாளர்களையும் திரைக்குள் இழுக்கிறது.
ரிது வர்மா தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நாசர் வழக்கம் போல் வாகை சூடுகிறார். மூன்று குட்டி பசங்களும் நம்மை பள்ளி பருவத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இப்படத்தை கவனமாக கையாண்டிருக்கிறார். அறிவியல் புனைகதை மற்றும் அம்மா சென்டிமென்ட் என இரண்டையும் அழகாக இணைத்திருக்கிறார். பொதுவாக அறிவியல் புனைகதைகளில் எளிதாக புரிந்து கொள்ள முடியாது.
ஆனால், அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் திரைக்கதையை தெளிவாக எடுத்துரைக்கிறார். திரைக்கதையை எழுதிய விதமும் அதை அழகாக காட்சிப்படுத்திய விதமும் ஸ்ரீ கார்த்திக்கின் மெனக்கெடலையும், திறமையும் தெறிக்கிறது. இக்கதையை என் அம்மாவை மனதில் வைத்துக் கொண்டு எழுதினேன் என்று அவர் அளித்த பேட்டிக்கு நியாயம் கற்பித்துவிட்டார் என்றும் சொல்லலாம்.
இசை மற்றும் பாடல் வரிகள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. 1998 ஆம் ஆண்டில் இருக்கும் சென்னையையும், அந்த காலகட்டத்தில் வெளியான படங்களையும் ஒளிப்பதிவில் மிளிர்கிறது. தனக்கும் இப்படத்தில் பெரும் பங்கு இருக்கிறது என்று கலை இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.
மொத்தத்தில் வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவது அரிது. ஆகையால், கிடைத்த வாய்ப்பை அந்த கணத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.